திருப்பூர்,
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சிக் காலத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் நிதியில் புதிதாகக் கட்டியது போல அதிமுக எம்எல்ஏ திறந்து வைத்தார்.

திருப்பூர் மாநகராட்சி 14 ஆவது வார்டு காவிலிபாளையம் புதூரில் கடந்த ஞாயிறன்று சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை வடக்குத் தொகுதி அதிமுக எம்எல்ஏ கே.என்.விஜயகுமார் திறந்து வைத்தார். இந்த விழாவில் அதிமுக பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ஆனால் முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் திருப்பூர் சட்டமன்றத் தொகுதி வடக்கு, தெற்கு என இரண்டாகப் பிரிக்கப்படாமல் ஒரே தொகுதியாக இருந்த சமயம் வேலம்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியாக காவிலிபாளையம் புதூர் இருந்தபோது, இந்த அங்கன்வாடி மையம் கட்டுவதற்கு 2008 – 09 எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ. 2 லட்சத்து 20 ஆயிரம் ஒதுக்கப்பட்டது.  இந்த கட்டிடம் கட்டப்பட்ட பிறகும் அங்கு அங்கன்வாடி மையம் முறைப்படி திறந்து வைக்கப்படவில்லை. சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் காவிலிபாளையத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது. எனினும் புதிதாக கட்டப்பட்ட அந்த கட்டிடம், பக்கத்தில் இருக்கும் காவிலிபாளையம் புதூர்தொடக்கப் பள்ளிக்கு சத்துணவுசமையல் கூடமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. காவிலிபாளையத்தில் செயல்பட்டு வந்த அங்கன்வாடி மையம் பிரதான சாலையின் ஒரத்தில் அமைந்திருந்ததால் போக்குவரத்து இருக்கும் பகுதியில் குழந்தைகள் பாதுகாப்பு கருதி அதை புதிய கட்டிடத்திற்கு மாற்றுவதற்கு கோரிக்கை எழுந்தது.

அதேசமயம் காவிலிபாளையம் புதூர் ஆரம்ப பள்ளிக்கும் சத்துணவு சமையல் கூடம் தனியாக கட்டப்பட்டது. இதையடுத்து எம்எல்ஏ நிதியில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்திற்கு ஆரம்பப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் என்.முத்துசாமி உள்ளிட்டோர் நிதியுதவி செய்து வர்ணம் பூசுவது உள்ளிட்ட சிறு மராமத்துப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு புதுப்பொலிவுடன் மாற்றப்பட்டது. இந்நிலையில்தான் 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அந்த கட்டிடத்தை சட்டமன்ற உறுப்பினர் நிதி எந்த ஆண்டில் எவ்வளவு மதிப்பீடு ஒதுக்கப்பட்டது போன்ற விபரங்கள் தகவல் பலகை இல்லாமல், தற்போதைய ஆட்சிக் காலத்தில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் போல காட்டிக் கொண்டு, அதிமுக எம்எல்ஏ கே.என்.விஜயகுமார் மற்றும் ஆளும் கட்சியினர் பங்கேற்று திறந்து வைத்துள்ளனர்.

காவிலிபாளையம் மற்றும் காவிலிபாளையம் புதூர் மக்கள் ஆளும் கட்சியினரின் செயல் தற்போது கேலிகிண்டல் பேச்சாக மாறியுள்ளது. எனினும் குழந்தைகள் பாதுகாப்பிற்கு அங்கன்வாடி மையம் அமைந்தது ஆறுதல் அளிப்பதாகவும் ஊர் மக்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.