புதுதில்லி;
இந்திய வங்கிகளின் வராக் கடன் ஏற்கெனவே, பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ள நிலையில், நடப்பு நிதியாண்டின் முடிவில் அது இன்னும் மோசமாகும் ஆபத்து இருப்பதாக ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.‘இந்தியாவின் பட்டியலிடப்பட்ட வங்கிகளின் மொத்த வாராக் கடன் அளவு 2018 மார்ச் மாதத்தில் 11.6 சதவிகிதம் உயர்ந்திருந்தது; இது அடுத்த ஆண்டின் மார்ச் மாதத்தில் 12.2 சதவிகிதமாக உயரக்கூடும்’ என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

இந்தியாவில் பொதுத்துறை வங்கிகளின் வராக்கடன், நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதுகுறித்து ஏற்கனவே பொருளாதார வல்லுநர்கள் பலர் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், மத்திய ரிசர்வ் வங்கி, ஜூன் 26-ஆம் தேதி ‘நிதி நிலைத்தன்மை’ குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், வராக்கடன் பிரச்சனை இப்போதைக்கு தீருவதாக இல்லை; மாறாக இன்னும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

‘ஒட்டுமொத்த வராக்கடன் அதிகரிப்பு காரணமாக வங்கித் துறையின் அழுத்தம் அதிகரித்து வருகிறது. வங்கிகளின் வராக்கடன் அழுத்தம் காரணமாக தற்போது 11 பொதுத்துறை வங்கிகள் ‘பிசிஏ’ (Prompt Corrective Action) சட்டத்தின் படி ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது, இந்த வங்கிகள் புதிய கிளைகளை திறப்பது, பணியாளர்களை பணியமர்த்துவது உள்ளிட்டவற்றை ரிசர்வ் வங்கி கண்காணிக்கும்.
‘பிசிஏ’ சீரமைப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ள, தேனா வங்கி, யூசிஓ வங்கி, ஐடிபிஐ வங்கி, பாங்க் ஆப் மகாராஷ்டிரா, கார்பரேஷன் வங்கி, பாங்க் ஆப் இந்தியா, செண்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா, ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ், இந்தியன் ஓவர்சீஸ் பாங்க் மற்றும் அலகாபாத் வங்கி ஆகிய 11 வங்கிகள் தவிர மேலும் 6 வங்கிகளும் தங்களது மூலதனச் செயல்பாடுகளில் மோசமாக நிலையில் உள்ளன. இந்த வங்கிகளின் ஒட்டுமொத்த வராக்கடன் 2018 மார்ச் மாதத்தில் 21 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இது நடப்பு நிதியாண்டு இறுதியில் 22.3 சதவிகிதமாக அதிகரிக்கும்.
தற்போது, மிகவும் நலிவுற்ற வங்கிகளின் செயல்பாட்டுக்கு ரிசர்வ் வங்கி போதிய மூலதனம் வழங்கி அவற்றின் வளர்ச்சிக்கு உதவி வருகிறது. சிறந்த செயல்பாடுகள் கொண்ட வங்கிகள், இழப்பு எதனையும் சந்திக்காமல் இருப்பதற்கும் போதிய உதவி வழங்கப்பட்டு வருகிறது.
ஆகவே, தங்களின் சீர்திருத்தப் பணிகள் சிறப்பாக நடைபெற்றால், வங்கிகளின் செயல்பாடு மேம்பட்டு, அபாயங்கள் குறைக்கப்படும்’ என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.வராக்கடன் அதிகரிப்பு பிரச்சனை நாட்டின் நிதி நிலைமையிலும் சிக்கலை ஏற்படுத்தும் என்று ரிசர்வ் வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.