சேலம்,
பசுமை வழிச்சாலைக்கு போதிய இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ள தமிழக அரசு, முதலில் தங்களுக்குரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என என்எச் 68ல் சாலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

சேலம் – உளுந்தூர்பேட்டை வரை 136 கிலோ மீட்டர் தூரம் நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்கு கடந்த 2013 ஆம் ஆண்டு 19 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஆனால், இந்நிலத்தின் உரிமையாளர்களுக்கு மத்திய அரசு அறிவித்த நில ஆர்ஜித சட்டம் மதிப்பை விட குறைந்தளவிலான இழப்பீட்டு தொகையே வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அப்பகுதி விவசாயிகள், நெடுஞ்சாலை என்எச் 68 ஆல் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நலச்சங்கத்தை ஆரம்பித்து இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி பொதுநல வழக்கு தாக்கல் செய்தனர். இதன் பின்னர் இதுவரையிலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. இந்நிலையில், சேலம் – சென்னை இடையே 8 வழிச்சாலை அமைக்கும் வகையில் பசுமை வழிச்சாலை திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், இதற்கான கட்டாயமாக நிலம் கையப்படுத்தும் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதன்காரணமாக பாதிக்கப்படும் விவசாயிகள், தங்களது விளை நிலங்களை கையப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதுடன், ஆங்காங்கே போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து இத்திட்டத்தின் கீழ் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு அதிக இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் என்எச் 68 நெடுஞ்சாலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நலசங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து சங்கத் தலைவர் கோபாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், 2013ல் நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்கு நில ஆர்ஜிதப்படுத்தப்பட்ட விவசாயிகளுக்கே உரிய நிவாரண தொகை இதுவரை வழங்கப்படவில்லை. இந்நிலையில் தமிழக அரசு தற்போது பசுமை வழிச்சாலை திட்டத்தில் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு பல மடங்கு இழப்பீடு தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது. எனவே, தமிழக அரசு முதலில் என்எச் 68 நெடுஞ்சாலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குரிய இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். அதன் பின்னரே பசுமை வழி சாலை திட்ட பணிகளை தொடர வேண்டும். மேலும், என்எச் 68 நெடுஞ்சாலை விவகாரத்தில் விவசாயிகளை ஏமாற்றியதுபோல், பசுமை வழிச்சாலை திட்டத்திலும் விவசாயிகளை ஏமாற்றக்கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: