நாமக்கல்,
பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள யுவராஜ், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக புதனன்று நாமக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகேயுள்ள கிழக்கு தெட்டிப்பாளையம் ரயில் பாதையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் தேதி சேலம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் (23) படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த சம்பவம் தெடர்பாக சேலம் மாவட்டம், சங்ககிரியை சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்பட 17 பேரை திருச்செங்கோடு காவல்துறையினர் கைது செய்தனர். இதில் யுவராஜ் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு டிச.19 ஆம் தேதியன்று நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி இளவழகன் முன்பு யுவராஜ் இந்த வழக்கு சம்பந்தமாக ஆஜரானார்.

அப்போது, யுவராஜின் நீதிமன்ற காவலை நீட்டிப்பு செய்து நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த யுவராஜ், காவல் நீட்டிப்பை கண்டித்தும், மிரட்டல் விடுக்கும் வகையில் நீதிபதி இளவழகன் முன்பு ஆவேசமாக கூச்சலிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் யுவராஜை நீதிமன்றத்தில் இருந்து அழைத்துச் சென்றனர். இதன்பின் நீதிமன்றத்தில் விதிகளுக்கு புறம்பாக நீதிபதியை விமர்சித்து யுவராஜ் ஆவேசமாக பேசியது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாவட்ட முதன்மை நீதிமன்றம் மூலம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவின்படி, நாமக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் யுவராஜ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு சம்பந்தமாக புதனன்று பலத்த காவல்துறையினர் பாதுகாப்புடன் யுவராஜ் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி தனபால் முன் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தனபால் வழக்கை ஒத்திவைத்து 6.7.18 அன்று மீண்டும் யுவராஜ் ஆஜராக உத்தரவிட்டார். இதனையடுத்து யுவராஜை காவல்துறையினர் திருச்சி சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

Leave A Reply

%d bloggers like this: