மதுரை;
மருத்துவப்படிப்பு சேர்க்கைக்கான நீட் தேர்வு தரவரிசைப் பட்டியலை மத்திய அரசு தற்போதைக்கு வெளியிடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

நீட்தேர்வு வினாத்தாள் குளறுபடியால் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும் என்று கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கில், நீட் தேர்வில் தமிழ் வினாத்தாள் மொழிபெயர்ப்பில் அதிக குளறுபடி இருந்ததால் தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 49 வினாக்களுக்கு 4 மதிப்பெண்கள் வீதம் 196 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க வேண்டும் என கேட்டிருந்தார்.

இந்த வழக்கு புதன்கிழமையன்று நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ் மொழி பெயர்ப்பில் பல வினாக்களில் குளறுபடிகள் இருந்ததாகவும் அதே வினாத்தாளை ஆங்கிலத்திலிருந்து மராட்டி, இந்தி போன்ற மொழிகளில் மொழிபெயர்க்கும் போது குளறுபடிகள் இல்லை எனவும் பீகாரில் 37 ஆயிரம் பேர் தேர்வு எழுதியதில் 35 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்; ஆனால் தமிழ் மொழி பெயர்ப்பு பிழையினால் தான் தமிழில் அதிக மதிப்பெண்கள் பெற முடியவில்லை என டி.கே.ரங்கராஜன் எம்.பி. தரப்பு வழக்கறிஞர் வாதாடினார். இதில் ,நீட் தேர்வு தர வரிசைப் பட்டியலை வெளியிடுவதற்கு ஏன் இடைக்காலத் தடை விதிக்கக் கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு மத்திய அரசு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் கூறுகையில், மொழி பெயர்ப்பில் சில தவறுகள் இருக்கத்தான் செய்யும். நீட் தேர்வு தர வரிசைப் பட்டியலை தற்போதைக்கு உடனடியாக அரசு வெளியிடாது என உறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை ஜூலை 2 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

டிகே.ரங்கராஜன் பேட்டி
வழக்கு குறித்து மனுதாரர் டி.கே.ரங்கராஜன் எம்.பி., செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழகத்தில் 1 லட்சத்து 25 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதியுள்ளனர். இதில் தமிழில் 24 ஆயிரம் மாணவர்கள் எழுதியுள்ளனர். தமிழில் எழுதிய மாணவர்களின் வினாத் தாள்கள் மொழி பெயர்ப்பு என்பது சரியாக இல்லை .எனவே தமிழில் 49 வினாக்கள் தவறாக உள்ளது; அவர்களுக்கு 196 மதிப்பெண்கள் தரவேண்டும் என்ற வழக்கு புதனன்று விசாரணைக்கு வந்தபோது எங்கள் தரப்பில் இதே ஆண்டு மகாராஷ்டிர மாநிலத்தில் வினாத்தாள்கள் அரைமணிநேரம் தாமதமாக வழங்கப்பட்டதற்காக மதிப்பெண்களை வழங்கவேண்டும் என வழக்கு நடத்தப்பட்டு அதற்கான முழுமதிப்பெண்கள் வழங்கவேண்டும் என மகாராஷ்டிர மாநில உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் மதிப்பெண்கள் வழங்கியுள்ளதை சுட்டிக்காட்டினோம், ஜூலை 2 அன்று முழுமையாக விசாரித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும்” என்று தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: