திருப்பூர்,
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் உறவினரான, திருப்பூரைச் சேர்ந்த பனியன் ஏற்றுமதியாளர் சிவமூர்த்தி காரில் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இது பற்றிய விபரம் வருமாறு: காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினியின் சகோதரி பத்மினி. இவர் திருப்பூரைச் சேர்ந்தவர். இவரது மகள் துர்கா வைஷ்ணவியின் கணவர் சிவமூர்த்தி (47). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். சிவமூர்த்தி திருப்பூர் ஊத்துக்குளி ரோடு கருமாரம்பாளையம் பகுதியில் பின்னலாடை நிறுவனம் நடத்திவந்தார். இந்நிலையில், கடந்த 25ஆம் தேதி திங்களன்று காலை வீட்டில் இருந்து, கோவை செல்வதாக கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றார். அதன் பிறகு அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. இதையடுத்து சிவமூர்த்தியை தேடியுள்ளனர். ஆனால் வழக்கமாக அவர் செல்லக்கூடிய பல இடங்களில் தேடியும் அவர் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனவே, அவரது தந்தை சின்னசாமி திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் மகன் சிவமூர்த்தியைக் காணவில்லை என செவ்வாயன்று புகார் கொடுத்தார். இந்த புகாரின்பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துஅவரைத் தேடத் தொடங்கினர். அவரது காரின் எண்ணைக் கொடுத்து பல இடங்களிலும் காவல் துறையினர் தேடுதலில் ஈடுபட்டனர்.

செவ்வாயன்று நள்ளிரவு வேலூர் மாவட்டம் ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அதிநவீன காரில் வந்த 3 பேரை நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தியதில், அவர்கள் வந்த கார் சிவமூர்த்திக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. அத்துடன் காரில் வந்த விமல், கௌதமன், மணிபாரதி ஆகியோரிடம் மேற்கொண்ட விசாரணையில் சிவமூர்த்தியை மேட்டுப்பாளையத்திற்கு காரில் அழைத்துச் சென்று கொலை செய்து,கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கெளவரப்பள்ளி அணையில் அவரது உடலை வீசி விட்டதாகத் தெரிவித்தனர். காரில் தப்பி வந்த போது 3 பேரும் ஆம்பூர் அருகே பிடிபட்டுள்ளனர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் கெளவரப்பள்ளி அணையில் சிவமூர்த்தியின் சடலத்தை புதனன்று கண்டுபிடித்தனர். பணத்திற்காகவோ அல்லது வேறு காரணமாகவோ இந்த கொலை நடைபெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனினும் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் உறவினர் கொல்லப்பட்ட சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.