தீக்கதிர்

தலித் மாணவர்களை பள்ளியில் சேர்த்ததால் ஆத்திரம் புதுக்கோட்டை அருகே சாதி வெறியர்கள் அராஜகம்:சிபிஎம் கண்டனம்…!

புதுக்கோட்டை;
கறம்பக்குடி அருகே தலித் மாணவர்களை பள்ளியில் சேர்த்ததால் ஆசிரியர்களை தரக்குறைவாகத் திட்டியதோடு, பள்ளியின் சொத்துக்களையும் சேதப்படுத்தி சாதி வெறியர்கள் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பிலாவிடுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி என இரண்டு பள்ளிகள் இயங்கி வருகின்றன. இங்குள்ள தலித் குடும்பத்துப் பிள்ளைகள் பெரும்பாலும் ஆதிதிராவிடர் நலப்பள்ளிலேயே படித்து வந்துள்ளனர். ஊராட்சிய ஒன்றிய நடுநிலைப்பள்ளி இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் வசிக்கும் பகுதியில் இருப்பதால் அந்தப் பகுதியைச் சேர்ந்த அங்கு மாணவர்கள் படித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், இந்த ஆண்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், பணியில் இருக்கின்ற ஒரு ஆசிரியர் வேறு பள்ளிக்கு கட்டாய மாறுதல் செய்ய வேண்டிய நிலை வந்துள்ளது. கூடுதலாக மாணவர்களைச் சேர்த்தால் அனைத்து ஆசிரியர்களும் இங்கேயே வேலை செய்யலாம் என்பதால் கூடுதல் மாணவர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பள்ளியில் சேர்க்கும் வயதுள்ள குழைந்தைகளை தங்கள் பள்ளியில் சேர்க்குமாறு வீடுகளுக்குச் சென்று பெற்றோர்களிடம் பேசியுள்ளனர். தாங்கள் சிறந்த கல்வியைத் தருவதாகவும் பெற்றோர்களிடம் உறுதியளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பிலாவிடுதி ஊராட்சிக்கு உட்பட்ட சாஞ்சாடி தெருவில் உள்ள நல்லதம்பி என்பவர் தனது இரண்டு பிள்ளைகளையும் சில தினங்களுக்கு முன்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சேர்த்துள்ளார். இந்தக் குழந்தைகள் தலித் என்பதால் ஆத்திரமடைந்த அந்தப் பகுதியைச் சேர்ந்த சில சாதி வெறியர்கள் ‘கீழ்சாதிப் பிள்ளைகளை எப்படி நீங்கள் பள்ளியில் சேர்க்கலாம் என ஆசிரியர்களை மிரட்டியுள்ளனர். அதற்கு, அவர்களை சேர்க்கக்கூடாது என்று சொல்வதற்கு நீங்கள் யார்? நாங்கள் அனைத்து மாணவர்களையும் சேர்ப்போம் என ஆசிரியர்கள் கூறியுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த சாதி வெறியர்கள் குடிநீர்க் குழாய், கழிப்பறை உள்ளிட்ட பள்ளியின் சொத்துக்களைச் சேதப்படுத்தியுள்ளனர். மேலும், பணியில் இருந்த ஆசிரியர்களை மிகவும் கேவலமான முறையில் திட்டிச் சென்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பள்ளி ஆசிரியர்கள் கறம்பக்குடி காவல் நிலையத்தில் நடந்துள்ள சம்பவம் குறித்து புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக 3 பேரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த ஊரைச் சேர்ந்த சில கட்டப் பஞ்சாயத்துப் பேர்வழிகள் கறம்பக்குடி காவல் நிலையத்தில் சமாதானம் பேசி, இனிமேல் இப்படி நடக்காது என வாக்குறுதி அளித்து புகார் பதியவிடாமல் அழைத்து வந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
மாணவர்களுக்கு நல்ல சிந்தனையையும், சாதி மறுப்பையும், சமத்துவத்தையும் போதிக்க வேண்டிய கல்வி நிலையத்திலேயே சாதி வெறியர்கள் இத்தகைய அராஜக செயலில் ஈடுபட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. நடந்துள்ள சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டக்குழு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.

மேலும், கறம்பக்குடி காவல்துறையினர் கட்டப் பஞ்சாயத்துக்கு இறையாகாமல் பள்ளியில் சாதி வெறிச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது முறையாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்படி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.