கோவை,
கோவை குற்றாலத்தில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியையொட்டிய கோவை சாடிவயல் பகுதியில் கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி உள்ளது. தற்போது பெய்து வரும் பருவமழையின் காரணமாக கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, கடந்த ஜூன் 9 ஆம் தேதி முதல் தொடர்ந்து 11 நாட்கள் சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சியில் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது. பின்னர், கடந்த ஜூன் 19 ஆம்தேதி முதல் சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சிக்கு செல்ல வனத்துறையினர் அனுமதி அளித்தனர். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறுவாணி அடிவாரம், சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்தது. இதனை தொடர்ந்து செவ்வாயன்று வனத்துறை அதிகாரிகள் குற்றால அருவிக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது, அருவியில் நீர்வரத்து அதிகமாக இருந்தது. இதனால், மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் உத்தரவின்படி, கோவை குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடைவிதித்தனர். தொடர்ந்து அருவியில் தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதால் புதனன்றும் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.