திருப்பூர்,
திருப்பூரில் தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் மற்றும் லாரி மோதியதில் ஆம்புலன்ஸில் பயணம் செய்த 2 பெண்கள் உட்பட 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், நல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஜோதிராஜ். இவருக்கு மூச்சு கோளாறு இருந்ததன் காரணமாக கடந்த சில நாட்களாக திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக செவ்வாயன்று தனியார் மருத்துவமனையின் ஆம்புலன்ஸில் தனது மனைவி பிரியா மற்றும் உறவினர்களோடு ஒட்டன்சத்திரம் செல்ல தாராபுரம் சாலை வழியாக சென்றுள்ளனர். இந்நிலையில் கோவையிலிருந்து கரூர் நோக்கி சென்ற லாரி அவிநாசிபாளைம் அருகே சாலையை கடக்கும்போது வேகமாக வந்த ஆம்புலன்ஸ் மீது எதிர்பாராத விதமாக மோதியுள்ளது. இதில் ஆம்புலன்ஸில் பயணம் செய்த ஜோதிராஜ் மற்றும் அவரது மனைவி பிரியா, உறவினர் ஞானசெல்வம் ஆகியோர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் காயமடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உட்பட 5 நபர்களை காவல்துறையினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மீட்டு பல்லடம், திருப்பூர் பகுதியிலுள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் திருப்பூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

You must be logged in to post a comment.