கோவை,
வன்கொடுமை சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் நடவடிக்கையை கண்டித்தும், அதனை பலப்படுத்த தனிச்சட்டம் இயற்றக் கோரியும் ஜூலை 2 ஆம் தேதி நடைபெற உள்ள ரயில் மறியல் போராட்டத்தை விளக்கி கோவையில் செவ்வாயன்று பிரச்சார பயணம் துவங்கியது.

ஒடுக்கப்பட்ட தலித் மக்களுக்கு சிறிதளவேனும் நிவாரணம் அளிப்பதாக இருந்த வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை வலுவிலக்கச் செய்யும் வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை கண்டித்து நாடு முழுவதும் இடதுசாரி மற்றும் தலித்அமைப்புகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. மேலும், உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக அவசர சட்டத்தை இயற்றிட வேண்டும். இதனை அரசியல் சாசனத்தின் 9 ஆவது அட்டவணையில் இணைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி இப்போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இதன்ஒருபகுதியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம், ஆதித்தமிழர் பேரவை, திராவிடத் தமிழர் கட்சி, திராவிடர் விடுதலை கழகம், தமிழ்புலிகள், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகிய அமைப்புகள் சார்பில் ஜூலை 2 ஆம் தேதி தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி கோவையில் நடைபெறும் ரயில் மறியல் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமை தாங்குகிறார். இதனையடுத்து இப்போராட்டத்தின் அவசியம் குறித்து மக்கள் மத்தியில் பிரச்சாரம் மேற்கொள்ளும் வகையில் செவ்வாயன்று கோவையில் வாகன பிரச்சார இயக்கம் நடைபெற்றது. புலியகுளம் பெரியார் சிலை முன்பிருந்து துவங்கிய பிரச்சார இயக்கத்திற்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச்செயலாளர் யு.கே.சிவஞானம் தலைமை தாங்கினார்.

இந்த பிரச்சார இயக்கத்தை சிபிஎம்நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் துவக்கி வைத்து உரையாற்றினார். தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர மாவட்ட செயலாளர் ஜோ.இலக்கியன், ஆதித்தமிழர் கட்சியின் நிர்வாகி ரவிக்குமார், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தின் செயலாளர் அஷ்ரப்அலி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர்.முன்னதாக, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு பிரச்சார இயக்கம் துவங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த இயக்கத்தில் வடகோவை காமராஜபுரம், சித்தாப்புதூர், குறிச்சி, செட்டிபாளையம், வெள்ளளூர், இருகூர், ஒண்டிபுதூர், சௌரிபாளையம், கணபதி, நா.கா.புதூர், துடியலூர் உள்ளிட்டு மாவட்டம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.