திருப்பூர்,
திருப்பூர் மாநகராட்சி நெசவாளர் காலனி உயர்நிலைப் பள்ளியில் கட்டி முடித்து ஒரு மாதமே ஆன புதிய கட்டிடத்தின் இரண்டாவது மாடி ஜன்னல் கதவு உடைந்து விழுந்து மூன்று குழந்தைகள் காயமடைந்தனர்.

திருப்பூர் பி.என்.சாலை நெசவாளர் காலனி சந்திப்பில் மாநகராட்சி ஆரம்பப் பள்ளியும், உயர்நிலைப் பள்ளியும் ஒரே வளாகத்தில் செயல்பட்டு வருகின்றன. இதில் உயர்நிலைப் பள்ளிக்கு, அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 68 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு மாடி கொண்ட புதிய கட்டிடத்திற்கான கட்டுமானப்பணி கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.  2018 ஜூன் மாதம் புதிய கல்வியாண்டு தொடங்கிய நிலையில், இப்பள்ளியில் படிக்கும் சுமார் 950 குழந்தைகளுக்கு போதிய வகுப்பறைகள் இல்லாததால் இந்த புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. தரை தளம், இரண்டு மாடிகள் கொண்ட இந்த கட்டிடத்தில் மொத்தம் 12 வகுப்பறைகள் உள்ளன. இந்நிலையில் திங்களன்று மாலை 4 மணியளவில் பலத்தகாற்று வீசியபோது, இக்கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இருந்த ஒரு ஜன்னலின் இரும்புக்கதவு பலத்த காற்றில் சுவற்றில் மோதியதில் பிடி நழுவி அங்கிருந்து கீழே விழுந்தது. அப்போது அந்த கட்டிடத்தின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் சுகப்பிரியா (வயது 8), மோனிகா (8) மற்றும் கீர்த்தனா (8) ஆகியமூன்று பேருக்கு காயம் ஏற்பட்டது.

ஜன்னல் கதவு காற்றில் உடைந்து கீழே விழுந்ததுடன், மாணவிகளின் அலறல் சத்தம்கேட்டு அனைவரும் அங்கு கூடினர். உடனடியாக மாணவிகள் மூவரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் இதேபோல் திருப்பூர் பத்மாவதிபுரம், பிச்சம்பாளையம் புதூர், கூலிபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளிலும் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. எனவே நெசவாளர் காலனி பள்ளியில் நேரிட்ட சம்பவத்தையடுத்து மேற்கண்ட நான்கு பள்ளிகளிலும் புதிய கட்டிடத்தை முழுமையாக ஆய்வு செய்து தரத்தையும், பாதுகாப்பையும் உத்தரவாதப்படுத்த வேண்டும் என்று முதன்மைக் கல்வி அதிகாரி சாந்தி பொதுப் பணித் துறையினரிடம் கூறியிருப்பதாகத் தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பழனிசாமியிடம் கல்வித்துறை சார்பில் அறிக்கை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு:
திங்களன்று மாலை நடைபெற்ற இச்சம்பவம் நெசவாளர் காலனி பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி இரண்டிலும் சேர்ந்து மொத்தம் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படித்து வரும் நிலையில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தில் ஏற்பட்ட இந்த விபத்து அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் பற்றி அறிந்த திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாந்தி செவ்வாயன்று காலை இப்பள்ளிக்கு வந்து விசாரணை மேற்கொண்டார். அவருடன் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர், உதவிப் பொறியாளர் உள்ளிட்டோரும் வந்து கட்டிடத்தை ஆய்வு செய்தனர். பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர். அவர்களிடமும் இந்த சம்பவம் பற்றி கல்வி அலுவலர் சாந்தி விசாரணை செய்தார்.

இது பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, நடந்த சம்பவம் பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளோம். விசாரணையின் முடிவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பொதுப்பணித் துறை உதவிசெயற்பொறியாளர் கூறுகையில், கட்டிடம் தரமாக கட்டப்பட்டுள்ளது. இதுபற்றி ஆய்வு செய்து வருகிறோம். விசாரணைக்குப் பிறகு எதனால் இந்த சம்பவம் ஏற்பட்டது என்று அறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பொதுமக்கள் குற்றச்சாட்டு:
புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தின் இரும்பு ஜன்னல் கதவு உடைந்திருப்பது கட்டுமானப் பணியின் தரத்தை வெளிப்படுத்துகிறது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக குழந்தைகளுக்கு வேறு அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை. எனினும் முழு ஆய்வுக்கு உட்படுத்தி கட்டிடத்தின் உறுதித்தன்மையையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும் என்று பெற்றோர்கள் ஆவேசத்துடன் வலியுறுத்தினர். மாணவ, மாணவிகள் பாதுகாப்பு தொடர்பான இப்பிரச்சனையில் அப்பள்ளியின் ஆசிரியர்களும், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரும் மிகவும் கவலை தெரிவித்தனர். குழந்தைகளின் பாதுகாப்பை நூறு சதவிகிதம் உறுதிப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.