சென்னை;
தமிழக சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 26) காவல்துறை மானியக்கோரிக்கை மீது நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், ‘‘தமிழகத்தில் கொலை, கொள்ளை,வழிப்பறி, செயின் பறிப்பு, சிலை கடத்தல், மனித உரிமைகள் மீறில், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, முகமூடி கொள்ளையர்களின் அட்டூழியம் அதிகரித்துவிட்டதோடு அனைத்து குற்றச் செயல்களில் தென் மாநிலங்கள் மட்டுமல்ல இந்தியாவில் தமிழகம் தான் முதல் மூன்று இடங்களில் உள்ளது’’ என்று குற்றம் சாட்டினார்.

அப்போது குறுக்கிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘‘கொலை, கொள்ளை, திருட்டு சம்பவங்கள் கடந்த ஆட்சி காலத்தில் நடந்துள்ளது என்றும் ‘திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’ என்று கூறி பிரச்சனையை திசை திருப்பினார்.
தொடர்ந்து பேசிய ஸ்டாலின், ‘‘தமிழ்நாடு பயங்கரவாதிகளின் பயிற்சிக்களமாக மாறி வருகிறது; மலைப்பகுதிகளில் பயிற்சி கொடுக்கிறார்கள். இதே நிலை தொடர்ந்தால் மாநிலம் கலவர பூமியாக மாறி விடும் என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் கூறியதை கண்டிக்காதது ஏன்?’’ என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், ‘‘சேலம்-சென்னை 8 வழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனநாயக ரீதியில் அமைதியாக போராட்டம் நடத்தும் பொது மக்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களை காவல்துறையினர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைப்பதும், குண்டர் சட்டத்தில் கைது செய்வதும் தொடர்கிறது. இதற்கு உதாரணம், நடிகர் மன்சூர் அலிகான், மாணவி வளர்மதி, நந்தினி, சமூக ஆர்வலர்கள், வயதான பெண்கள் எனப் பலரும் அடங்குவர். முதலமைச்சரின் சொந்த மாவட்டம் என்பதால் காவல்துறையின் அத்துமீறி நடந்துகொள்வது சரியல்ல’’ என்றும் ஸ்டாலின் கூறினார்.

அப்போது, மீண்டும் குறுக்கிட்ட முதலமைச்சர், ‘‘மத்திய அமைச்சர் கருத்து குறித்து ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு பதில் சொல்லாமல், ‘‘பசுமைச் சாலை அமைக்கும் பணியை எதிர்த்து நடக்கும் போராட்டத்தில் விவசாயிகள், நில உடமையாளர்கள் யாரையும் அரசு கைது செய்யவில்லை. சில அமைப்புகள் வேண்டுமென்றே, தூண்டிவிட்டு போராட்டம் நடத்தி வருவதால் சில பிரச்சனைகள் ஏற்பட்டு கொண்டிருக்கிறது. ஆகவே, அரசைப் பொறுத்தவரைக்கும் போராட்டங்களோ, சட்டம் ஒழுங்கை – சீர்குலைக்கும் வகையிலோ நடந்து கொண்டால் யாராக இருந்தாலும் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று மிரட்டல் விடுத்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.