லண்டன்;
பெண்களுக்கு மிகவும் ஆபத்து நிறைந்த நாடுகள் பட்டியலில், இந்தியா முதலிடத்தில் இருப்பதாக, ‘தாம்ஸன் ராய்ட்டர்ஸ்’ என்ற நிறுவனம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமை அதிகரிப்பு மற்றும் அடிமை உழைப்புக்கு தள்ளப்படுதல் உள்ளிட்ட காரணங்களால் உலகளவில் பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடாக இந்தியா உள்ளது என்று அந்த ஆய்வு கூறியுள்ளது.உலக அளவில் பெண்களுக்கு எதிராக, பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில், இதில் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை பகிர்ந்து கொள்வதற்காக கடந்த அக்டோபர் மாதம் ட்விட்டரில் ‘மீ டூ’  என்ற தலைப்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கினர்.

ஹாலிவுட் சினிமா தயாரிப்பாளர் ஹார்வே வின்ஸ்டீன் (ழயசஎநல றுநiளேவநin) மீது தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுகள் வெளியானதையடுத்து, ஹாலிவுட் நடிகை அலிசா மிலானோ இந்த பிரச்சாரத்தை தொடங்கினார்.

‘மீ டூ’ என்ற தலைப்பின் கீழ் பல்வேறு பிரபலங்கள் தங்கள் அனுபவங்கள், தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பதிவு செய்தனர். இந்த பிரச்சாரம் வைரலாக பரவிய நிலையில், பெண்களுக்கு ஆபத்தான நாடுகள் குறித்த உலகளாவிய ஆய்வை, வல்லுநர்கள் குழு மூலம் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் அறக்கட்டளை மேற்கொண்டது. ஐக்கிய நாடுகள் அபையில் உள்ள 193 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் உட்பட 550 வல்லுநர்கள் ஆய்வில் பங்கேற்று கருத்து தெரிவித்தனர்.உலகளவில் பெண்களின் உடல்நலம், அவர்களின் பொருளாதார வளம், கலாச்சாரம் அல்லது மரபு ரீதியான பெண்களின் பழக்க வழக்கங்கள், பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறை, அடக்குமுறை, ஆட் கடத்தல் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பான கேள்விகள் ஆய்வில் இடம்பெற்றிருந்தன.

இந்த ஆய்வு முடிவுகள் செவ்வாயன்று வெளியிடப்பட்ட நிலையில், பட்டியிலில் இந்தியா முதலிடத்தைப் பிடித்திருப்பதாக, அதிர்ச்சிகரமான தகவலை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள், அமில வீச்சு, பாலியல் வன்முறைகள், பாலியல் குற்றங்களில் மகளிருக்கு எதிரான நிலைப்பாடு, இளம் பெண்கள், சிறுமிகள் வல்லுறவு, பெண்களுக்கு எதிரான கொடூரக் குற்றங்கள், குடும்ப வன்முறை, வேலையில் பாலினப் பாகுபாடு, திருமணத்தில் பெண் விருப்பம் நிராகரிப்பு, குழந்தை திருமணம் போன்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இந்தியாவில் பல மடங்கு அதிகரித்திருப்பதன், அடிப்படையில் உலக நாடுகளின் ஐ.நா. பிரதிநிதிகள் இந்தியாவிற்கு இந்த மோசமான முதலிடத்தை அளித்துள்ளனர்.அதாவது, உலகிலேயே பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடாக இந்தியா பட்டியலிடப்பட்டுள்ளது. பெண்களுக்கு மிகவும் ஆபத்தான முதல் 10 நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான், சிரியா ஆகியவை முறையே 2 மற்றும் 3-ஆவது இடத்திலும், சோமாலியா 4-ஆவது இடத்திலும், சவூதி அரேபியா 5-ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 6-ஆவது இடத்திலும் உள்ளன. அமெரிக்கா 10-ஆவது இடத்தில் உள்ளது.

இதே நிறுவனம் கடந்த 2011-ஆம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வில் பெண்களுக்கு ஆபத்து மிக்க பட்டியலில் இந்தியா 4-ஆம் இடத்தில் தான் இருந்தது. தற்போது மேலும் மோசமான வகையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை, நிர்பயா விவகாரத்திற்கு பின்னரும் கூட போதிய விழிப்புணர்வோ, தடுப்பு நடவடிக்கைகளோ எடுக்கப்படவில்லை என்று கூறும், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன ஆய்வானது, இந்தியாவில் 2007 முதல் 2016-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 83 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தையும் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தியாவில் ஒரு மணிநேரத்திற்கு 4 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. அரசியல் ஸ்திரமற்ற பாகிஸ்தானில் கூட பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் இந்த அளவிற்கு நிகழ்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இன்னும் சொன்னால் சோமாலியாவைக் காட்டிலும் இந்தியா மோசமான இடத்தில் இருப்பதுதான் வேதனையானதாகும்.இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைப்பதற்கும், பெண்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகளை சமாளிப்பதற்கும் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பதையே இந்த ஆய்வு முடிவுகள் காட்டுவதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, ராய்ட்டர்ஸ் ஆய்வு முடிவுகள் குறித்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தை நல அமைச்சகத்திடம் கேட்கப்பட்ட போது, அவர்கள் பதில் அளிக்க மறுத்துவிட்டதாகவும் ’ராய்ட்டர்ஸ்’ செய்தித் தளம் பதிவு செய்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.