தீக்கதிர்

பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம்…!

உலகிலேயே பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளின் படடியலில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. தாம்சன் ரெயூடர்ஸ் அமைப்பு நடத்திய ஆய்வில் இந்த அதிர்ச்சி தகவல்  தெரியவந்துள்ளது.  ஆய்வில் பெண்கள் தொடர்பான பிரச்சனையில் அனுபவமிக்க சுமார் 550 பேர் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்த பட்டியலில் இந்தியாவிற்கு அடுத்து ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியா ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. முதல் 10 இடங்களில் மேற்கு நாடுகளில் இருந்து அமெரிக்கா மட்டும் இடம் பெற்றுள்ளது.

இந்தியாவில் தற்போது பாலியல் அச்சுறுத்தல்கள் மற்றும் அடிமை தொழிலாளிகள் என பெண்களுக்கு பல ஆபத்தான சூழல்கள் நிலவுவதே இதற்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது. மேலும், இந்த ஆய்வில் ஆள்கடத்தல், தனித்துவிடப்படுதல், குடும்ப கட்டுப்பாட்டை பெண்கள் மட்டும் செய்து கொள்ள செய்வது மற்றும் பெண் அடிமை தொழிலாளர்கள் என பல கருத்துகள் இதில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்கொடுமைகளுக்கு தீர்வுகாண எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை. பெண்கள் பிரச்சனையில் தண்டனைகள் பெரும் குற்றவாளிகளின் எண்ணிக்கை என்பது மிக சொற்பம் எனவும் தெரியவந்துள்ளது. மேலும், இது தொடர்பாக பதில் அளிக்க மத்திய பெண்கள் அமைச்சகம் மறுத்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.