கரூர்;
பூட்டியே கிடக்கும் குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறக்க வேண்டும் என இளைஞர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்றத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு இப்பகுதி பொதுமக்கள், இளைஞர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை மனுவை வழங்கச் சென்றால் சட்டமன்ற அலுவலகம் பூட்டியே இருக்கிறது. இதனால், அவர்கள் திரும்பிச் செல்கின்றனர். தங்களது கோரிக்கைகளை சட்டமன்ற உறுப்பினரிடம் வழங்க முடியாமல் அப்பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து குளித்தலை பகுதி இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் இரா.முத்துச்செல்வன் தலைமையில் கோரிக்கை மனுவை அளிக்க சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்குச் சென்றனர்.
அம்மனுவில், குளித்தலை சட்டமன்ற உறுப்பினராக திமுகவைச் சேர்ந்த ராமர் இருந்து வருகிறார். குளித்தலை பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கைகளான குளித்தலை மணப்பாறை சாலையில் சுங்ககேட்டில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும்.

குளித்தலை பெரியார் – காவிரி மேம்பாலத்தில் இரவு நேரங்களில் அனைத்து மின் விளக்குகளையும் எரியும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலத்தில் உள்ள பழுதுகளை நீக்க வேண்டும். குளித்தலை ரயில்வே கேட் முதல் உழவர் சந்தை வரை புறவழிச்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். குளித்தலையில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இருந்தனர்.

ஆனால், அலுவலகம் பூட்டியுள்ளதை பார்த்து விட்டு கோரிக்கை மனுவை அலுவலக கதவில் ஒட்டிச் சென்றனர். மேலும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை தினமும் திறந்து சட்டமன்ற உறுப்பினர் பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் இல்லாத போது, அவரது உதவியாளர்கள் மூலம் மனுக்களை பெறுவதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.