====பேராசிரியர் கே. ராஜு====
எண்ணெய், இயற்கை எரிவாயு, அல்லது நிலக்கரி போன்ற பொருட்களிலிருந்து கிடைக்கும் வேதிப்பொருட்களை இணைத்து பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்படுகிறது. பயன்பாட்டுக்கு வந்து ஒரு நூற்றாண்டு ஆவதற்குள் பிளாஸ்டிக் பொருட்கள் மனித சமுதாயத்திற்கு மிகவும் தேவையானவையாக ஆகிவிட்டன. உற்பத்திச் செலவு குறைவாக இருப்பதும் அவற்றின் அசாத்தியமான பல்துறைப் பயன்பாட்டுத் தன்மையும்தான் இதற்குக் காரணம்.ஆனால் அவை எளிதில் மக்காதவை என்பதால் பூமியின் சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடு விளைவித்து வருவதும் அவற்றைத் தடை செய்ய வேண்டும் என்ற குரல் வலுத்து வருவதும் நாம் அறிந்த செய்திதான். தமிழக அரசும் மகாராட்டிர அரசும் பெரும்பாலான பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பிற்கும் விற்பனைக்கும் தடை விதித்து உத்தரவிட்டிருக்கின்றன. ஆனால் அந்த உத்தரவுகள் காகிதத்துடன் நிற்கப் போகின்றனவா அல்லது உண்மையிலேயே நிறைவேற்றப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மக்கள் ஒத்துழைப்பின்றி பிளாஸ்டிக் பொருட்கள் சந்தையிலிருந்து காணமல் போவது சாத்தியம் இல்லை.

உலக அளவில் சுற்றுச் சூழலுக்கு பிளாஸ்டிக் பொருட்கள் மிகப் பெரிய ஆபத்தாக மாறிவிட்டன. கடல் பரப்பில் பெரிய பிளாஸ்டிக் குப்பைகள் மலைகளாகக் குவிந்து மிதப்பதை சூழலியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். உலகெங்கிலும் ஒவ்வொரு நிமிடத்திலும் 10 லட்சம் பிளாஸ்டிக் பாட்டில்கள் விற்பனையாகின்றன. அவற்றில் 14 சதமானவை மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகின்றன. மற்றவை இறுதியில் கடல்களுக்கு வந்து சேருகின்றன. கடலின் தொலைதூரப் பகுதிகளையும் அவை மாசுபடுத்தி விடுவதால் கடல்வாழ் உயிரினங்களுக்கும் கடல் உணவை உட்கொள்வோருக்கும் பெருங்கேடு விளைவிக்கின்றன.மனித சமூகத்திலிருந்து மிக தொலைவில் இருக்கும் ஆர்க்டிக் பிரதேசங்கள் கூட பாதுகாப்பாக இருக்க முடிவதில்லை. மீன்களும் பறவைகளும் பிற விலங்குகளும் கடலில் எறியப்பட்ட ஐந்து டிரில்லியன் டன்கள் பிளாஸ்டிக் பொருட்களை உட்கொண்டு இறந்து போவதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. 2050-ம் ஆண்டிற்குள் மீன்கள் எந்தளவு எடையுடன் இருக்குமோ அதே அளவு எடை பிளாஸ்டிக் கழிவுகளும் இருக்கும் என சூழலியல் வல்லுநர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
பிளாஸ்டிக் கழிவுகளை சரியான முறையில் அகற்றிவிடும் பிரச்சனை நீண்ட நெடுங்காலமாகவே விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்து வந்திருக்கிறது.

தற்போது இங்கிலாந்தின் போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழகமும் அமெரிக்க ஆற்றல் துறையின் தேசிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சோதனைச்சாலையும் இணைந்து பிளாஸ்டிக் பாட்டில்களை உடைத்து நொறுக்கிப் போடும் புதிய நொதி (நணேலஅந) ஒன்றினைத் தற்செயலாகக் கண்டுபிடித்துள்ளன. பிளாஸ்டிக் பொருட்களால் விளையும் சூழல் நெருக்கடியிலிருந்து உலகம் தப்பிக்க இந்த சாதனை கைகொடுக்க இருக்கிறது. இதற்குத் தூண்டுகோலாக இருந்தது ஜப்பான் நாட்டில் 2016-ம் ஆண்டு ஒரு குப்பைக் கிடங்கிலிருந்த ஐ.சகையின்சிஸ் என்ற ஒரு நுண்ணுயிர் தண்ணீர் பாட்டில்கள், உணவு டப்பாக்கள், பாலியெஸ்டர் போன்ற பொருட்களில் உள்ள பிளாஸ்டிக்கினை உண்ணக்கூடியது எனக் கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வுதான். பிளாஸ்டிக்கை உண்ணும் நுண்ணுயிரா? எவ்வளவு அற்புதமான விஷயம்! இயற்கையாக மக்கவேண்டுமெனில் பிளாஸ்டிக்கிற்கு 450 ஆண்டுகள் தேவைப்படும். ஆனால் இந்தப் புதிய நொதிக்கு பிளாஸ்டிக்கை நொறுக்கிப் போட சில நாட்களே போதும்! இதை மேலும் விரைவுபடுத்தி பெரிய அளவில் பிளாஸ்டிக்கை அழிக்கும் வேலையை சாத்தியமாக்க முடியும் என ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். புதிய நொதிக்கு அவர்கள் காப்புரிமை கோரி விண்ணப்பித்துள்ளனர்.மேற்கண்ட நொதியைப் பயன்படுத்தி பிளாஸ்டிக்கை அதன் மூலப்பொருட்களாக மாற்றி, மறுசுழற்சி செய்து மீண்டும் பிளாஸ்டிக்கை உற்பத்தி செய்து கொள்ள முடியும் என்கிறார் இந்த ஆய்வினைத் தலைமையேற்று நடத்திய போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜான் மெக்கீஹான். சுற்றுப்புறத்தில் உள்ள பிளாஸ்டிக்கின் அளவினை கணிசமாகக் குறைக்க முடியும் என்ற நம்பிக்கையை இந்த ஆய்வு நமக்குத் தந்திருக்கிறது. மனித சமூகத்திற்கு இது மிக உற்சாகமான செய்தி என்பதில் சந்தேகம் இல்லை.
(நன்றி : 2018 ஜூன் ட்ரீம் 2047 இதழில் பிமன் பாசு எழுதிய கட்டுரை)

Leave a Reply

You must be logged in to post a comment.