சேலம்/திருவண்ணாமலை:
விவசாய விளைநிலங்கள், ஆயிரக்கணக்கான மரங்களை அழித்து சேலம்-சென்னை இடையே போடப்படும் எட்டு வழிச்சாலைக்கு எதிராக செவ்வாயன்று கருப்புக்கொடி போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தை சீர்குலைக்கும் நோக்கத்துடன் தமிழக அரசும் காவல்துறையும் அடக்குமுறையை ஏவின. பசுமைச் சாலை திட்டத்திற்கு நிலம் கொடுக்க விரும்பாத விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தும் விதமாக ஜூன் 26 ஆம் தேதி செவ்வாயன்று வீடுகளிலும், வயல் வெளிகளிலும் கருப்புக்கொடி ஏற்றுமாறு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகளின் சார்பில் அறைகூவல் விடப்பட்டிருந்தது.
இந்த அறைகூவலை ஏற்று சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் இல்லங்களிலும், வயல்வெளிகளிலும் செவ்வாயன்று காலை கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தை வெற்றிகரமாக்கியுள்ளனர்.

சேலம்
சேலம் மாவட்டத்தில் அயோத்தியாப்பட்டணம், கீரிப்பட்டி, எருமாபாளையம், இராமலிங்கபுரம் உள்ளிட்ட இடங்களில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களின் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கருப்பு கொடி ஏற்றிய பல இடங்களில் காவல் துறையினர் அராஜகமான முறையில் கருப்பு கொடியை அவிழ்த்து கிழித்து எறிந்தனர். கருப்பு கொடியை கட்டிய வீட்டின் உரிமையாளர்களுக்கு கடும் மிரட்டல் விடுத்துச் சென்றனர். கருப்பு கொடியை அவிழ்க்க முயன்ற காவல்துறையினருடன் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சில இடங்களில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற இப்போராட்டம் தொடர்பான செய்தியை சேகரிப்பதற்காக சென்ற மாத்ருபூமி தொலைக்காட்சி நிருபர் அனுஜார்ஜ் மற்றும் சிபிஎம் செங்கம் ஒன்றியச் செயலாளர் ராமதாஸ் உள்ளிட்ட ஐந்து பேரை திருவண்ணாமலை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பி.டில்லிபாபு செங்கத்தில் போராட்டம் முடிந்த பின்பு உணவு விடுதி ஒன்றில் வைத்து காவல்துறையினரால் எவ்வித காரணமும் கூறாமல் கைது செய்யப்பட்டு புதுப்பாளையம் காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார். பிற்பகல் பொதுமக்கள் அவரவர் வீடுகளில் கட்டியிருந்த கருப்புக் கொடிகளை போலீசார் பெரும் எண்ணிக்கையில் திரண்டு சென்று காவலர்களே அவிழ்த்து எடுத்துச் சென்றுள்ளனர்.

காவல்துறையினரின் இத்தகைய அராஜக நடவடிக்கைகளை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச செயலாளர் பெ.சண்முகம் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், “பொதுமக்கள் தங்களது எதிர்ப்பை அமைதியாகவும், ஜனநாயக முறைப்படி தெரிவிப்பதை கூட அனுமதிக்க மாட்டோம் என்று எதேச்சதிகாரமான முறையில் தமிழ்நாடு அரசு நடந்து கொண்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. தமிழக அரசு, எத்தனை அடக்குமுறைகளை கையாண்டாலும் விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் நிலத்தை கையகப்படுத்துவதை எதிர்த்து போராட்டம் தொடரும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். விவசாயிகளுக்கு நிலத்தின் மீதுள்ள உரிமையை பாதுகாத்துக் கொள்ள போராடுவதை தவிர வேறு வழியில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே அறிவித்தபடி ஜூலை 6 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் பசுமை சாலை தொடர்பான அரசாணை நகலெரிப்பு போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும், அரசாணை நகலெரிப்பு போராட்டத்திற்கும் அனைத்து கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்கள், சமூக நல அமைப்புகள் ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்வதாகவும் பெ.சண்முகம் கூறியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.