கோவை,
தண்ணீர் விநியோகிக்கும் உரிமத்தை பிரான்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்தது குறித்து விமர்சிப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யும் கோவைமாநகராட்சியின் செயல் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடிநீர் விநியோகம் செய்வதற்காக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்துடன் கோவை மாநகராட்சி ஒப்பந்தம் செய்துள்ளது. தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த ஒப்பந்தம் தொடர்பாக சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து கருத்துகள் வெளியிடப்பட்டு வருகின்றன. மேலும், கார்ப்பரேட் நிறுவனத்திடம் தண்ணீரை தாரைவார்த்துள்ள இந்த ஒப்பந்தமானது கோவை மாநகர மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இதுவரை முறையான எவ்வித விளக்கத்தையும் தாராத கோவை மாநகராட்சி நிர்வாகம், தற்போது சமூக வலைத்தளத்தில் விமர்சிப்பவர்களை அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

இதுதொடர்பாக திங்களன்று கோவை மாநகராட்சி பொறியாளர் லட்சுமணன், கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். இதில் சூயஸ் நிறுவனம் உடனான ஒப்பந்தம் குறித்து, பத்திரிக்கைகள், பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்திருந்தார்.இதையடுத்து இந்த புகாரின் அடிப்படையில் உக்கடம் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 504, 505(2)-ன் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், அரசின் திட்டம் ஏதுவானாலும் மறு கேள்வியே கேட்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற சர்வாதிகாரமான நடவடிக்கையாகவே இது தோன்றுகிறது.இயற்கையாய் கிடைக்கிற தண்ணீருக்கு யார் விலை வைப்பது என்கிற கேள்வியை எழுப்பினால் வழக்கு, கைது என்பது போன்ற அச்சுறுத்தல் நடவடிக்கையால் எழுந்து வருகிற விமர்சனங்களை தவிர்க்க முடியாது. மாநகராட்சி சூயஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்றம் இல்லாமல் அதிகாரிகளே மிகப்பெரிய ஒப்பந்தத்தை கார்ப்ரேட் நிறுவனத்துடன் போட்டுள்ளது இயல்பாகவே சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இந்நிலையில் மக்களின் அச்சத்தை போக்க வேண்டுமே தவிரஅச்சுறுத்தல் நடவடிக்கை ஒருபோதும் தீர்வாகாது என கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: