சோம்பேறித்தனத்தை வளர்ச்சி என்று சொல்ல முடியாது – டயராய் தேயும் டெலிவரி பாய்ஸ் – விபத்துக்கு பஞ்சமில்லை..

உணவு டெலிவரி சந்தையில் இந்தியா முழுவதும் எண்ணற்ற ஊழியர்களின் கடினமான உழைப்பில் மிக பிரம்மாண்டமான வளர்ச்சியை அடைந்துள்ளது ஸ்விக்கி. அந்த வளர்ச்சியின் குறியீடாக மைக்ரோ டெலிவரி என்று அழைக்கப்படும் பால், மருந்து, மளிகை சாமான்கள், செய்தி தாள்கள் போன்றவற்றை தற்போது வழங்கி வரும் ”ஸ்பர் டெய்லி(Spur Daily)” நிறுவனத்தை வாங்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த ” ஸ்பர் டெய்லி” நிறுவனத்தில் பல ”வெஞ்சர் கேப்பிடல்” நிறுவனங்கள் பல லட்சங்களில் முதலீடு செய்துள்ளன.

பத்திருபது வருடங்களுக்கு முன்னர் விற்பனையாளர் பிரதிநிதிகள் வேலை போல தற்போது இந்த உணவு விநியோக வேலை இளைஞர்களை இழுக்கிறது. ஆனால் யாரும் இங்கே நிரந்தரமாக வேலை பார்க்க இயலாது. குறிப்பிட்ட ஆண்டுகளில் கடும் உடல் வலி, இடுப்பு வலியுடன் வண்டியே ஓட்ட முடியாது என்ற நிலையை இவர்கள் அடைகிறார்கள்.

ஆர்டர் செய்த அரைமணி நேரத்தில் அவர்கள் முன் உணவுடன் இருக்கவேண்டும். எந்த நேரத்தில் ஆர்டர் கொடுத்தாலும் அவர்கள் விரும்பிய உணவுகளை உடனடியாக கொடுத்து விடவேண்டும். குழந்தைகளுக்கு என்று இரண்டு இட்லி மட்டும் ஆர்டர் கொடுத்தாலும் எடுத்துக் கொண்டு ஓடவேண்டும். முதியவர்கள் சிங்கிள் காபி மட்டும் ஆர்டர் சொன்னாலும் சுட சுட அங்கு நிற்கவேண்டும்.

வெஜ்ஜா, நான் வெஜ்ஜா, சைனிசா, தந்தூரியா, இபாக்கோ ஐஸ்கிரீமா, சாக்லெட்டா, பிரட் டோஸ்ட் என்ன வேண்டும் எங்கிருந்து வேண்டும் என்று மட்டும் சொன்னால் போதும். சரவணபவனில் இருந்து தலப்பாக்கட்டு பிரியாணி வரை – இபாக்கோ ஐஸ்கிரீமிலிருந்து ஹைவே கடை வரை நுழைந்து வாங்கி எடுத்துக்கொண்டு ஓடுவேண்டும்.

இந்த வேலையில் ’டைமிங்’ ரொம்ப முக்கியம். அதாவது ஒரு ரெஸ்டாரெண்டில் இருந்து ஆர்டர் எடுக்கின்றார்கள் என்றால் முப்பது நிமிடம் டைம் கொடுப்பார்கள். அதற்குள் வாடிக்கையாளரிடம் சென்று ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் தான் இன்சென்டிவ் ஆட் ஆகும்.

இன்சென்டிவ் என்ற பெயரில் இவர்களது சம்பளம் பல்வேறு நிபந்தனைகளோடு பிணைக்கப்பட்டிருப்பதால் இவர்களும் ஓலா, உபர் ஓட்டுநர்கள் போல அதிக சவாரிகளுக்குகாக அபாயகரமாக ஓட்டுகிறார்கள்.

ட்ராபிக் இல்லாத நேரம் தான் இவங்களுக்கு ஈஸி…. எவ்வளவு மழையாக இருந்தாலும் சமாளிச்சி கஸ்டமருக்கு உடனேயே டெலிவரி பண்ணா பாராட்டுவாங்க. இவங்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கும். ஏன்னா இவங்களுக்கு ”ரேட்டிங் ஸ்டார்ஸ்” உண்டு.

சீக்கிரமாக டெலிவரி செய்தால் ”ஃபைவ் ஸ்டார்” கொடுப்பாங்க. இதனால இன்சென்டிவ் கூடும். பல நேரம் கஸ்டமரோட நச்சரிப்புதான் அதிகமா இருக்கும். ட்ராபிக்ல மாட்டிகிட்டா…போனையும் எடுக்க முடியாது அத புரிஞ்சிக்கவே மாட்டாங்க

இன்ஜினியர் ஐ.டி.ஐ. டிகிரி டிப்ளமோ படிச்சவங்க எல்லோரும் வேலை செய்யிறாங்க. ஒரு ஸ்மார்ட் போனும், ஒரு டூ வீலரும் இருந்தா போதும் இந்த வேலைய செய்யலாம். குறைந்த பட்சம் மொபைல்ல வர இங்கிலீஸ் அட்ரஸை படிக்க தெரியனும்.

வெய்யிலு மழை தூசு தும்பு ரோடு டிராபிக்கினு பாக்காம வண்டியில அலையனும். தினமும் நூத்தி ஐம்பது கிலோ மீட்டருக்கு குறையாம வண்டிக்கு பெட்ரோல் போட்டுக்கினு தெருவுல சுத்தணும். பெட்ரோலுக்கு இருநூறு ரூபா குடுப்பாங்க. அஃசீடன்ட் ஆனா எல்லாம் அம்புட்டுத்தான்.

சென்னையில் மேல்தட்டு நடுத்தர வர்க்கத்திடம் அதிகரித்து வரும் தீனி வெறியும், சோம்பேறித்தனமும் இத்தகைய விநியோக வேலைகளுக்கான கிராக்கியை அதிகரித்து வந்தாலும் இதை ஒரு “வளர்ச்சி” என்று பார்க்க முடியாது. உட்கார்ந்து தின்பவர்களுக்காக ரிஸ்க் எடுத்துக் கொண்டு ஓடுகிறார்கள் இந்த டெலிவரி இளைஞர்கள்..

Leave a Reply

You must be logged in to post a comment.