உடுமலை,
உடுமலை அருகே பிஏபி திட்டத்தின் கீழ் உள்ள 3 குளங்களில் வண்டல் மண் எடுத்துக் கொள்ள விவசாயிகளுக்கு திங்களன்று அனுமதி வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள குளங்கள், உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணை, அமராவதி அணை, உப்பாறு அணை, நல்ல தங்காள் ஓடை உள்ளிட்ட நீர் நிலைகளில் கடந்த ஆண்டு தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது நீர் நிலைகளில் இருந்து இலவசமாக வண்டல் மண் எடுத்துக் கொள்ள விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட் டது. அதேபோல் இந்த ஆண்டும் நீர் நிலைகளில் வண்டல் மண் எடுத்துக் கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் உடுமலையை அடுத்துள்ள கரிசல்குளம், வளையபாளையம் குளம் மற்றும் பெரியகுளம் ஆகிய குளங்களை தூர் வாரவும், அதில் உள்ள வண்டல் மண்ணை எடுத்து உபயோகித்துக் கொள்ளவும் விவசாயிகளுக்கு வருவாய்த் துறை திங்களன்று அனுமதி வழங்கியது. இதுகுறித்து உடுமலை வட்டாட்சியர் தங்கவேல் கூறியதாவது:கரிசல்குளம், வளையபாளையம் குளம் மற்றும் பெரியகுளம் ஆகிய குளங்களில் வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், இதேபகுதிகளில் உள்ள மற்ற குளங்கள் மற்றும் திருமூர்த்தி அணை, அமராவதி அணை ஆகியற்றிலும் வண்டல் மண் எடுத்துக்கொள்ள விவசாயிகள் அனுமதி கோரியுள்ளனர். இது பரிசீலனையில் உள்ளது. விரைவில் அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.