திருப்பூர்,
திருப்பூரில் அடுத்தடுத்த இரு கடைகளின் மேற்கூரையை பிரித்து கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

இதை சிசிடிவி காட்சிகள் மூலமாக கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.திருப்பூர் நொச்சிபாளையம் பிரிவில் மளிகை மற்றும் அரிசி கடை நடத்தி வருபவர் கரைப்புதூரை சேர்ந்த செந்தில்(42). இவரது கடையில் பாலகுருநாதன் (19) மற்றும் ராஜன் (18) ஆகியோர் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் திங்களன்று இரவு வியாபார கணக்குகளை முடித்து ரூ.50 ஆயிரத்தை வைத்துவிட்டு கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். பின்பு, செவ்வாயன்று காலையில் கடையை திறந்தனர். அப்போது மேற்கூரை பிரிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து கடை உரிமையாளர் செந்திலுக்கு தகவல் தெரிவித்தனர். செந்தில் நேரில் வந்து பார்த்துள்ளார். அப்போது, பணப் பெட்டியில் வைத்திருந்த பணத்தை காணவில்லை.

இதனையடுத்து, கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவை பார்த்த போது முகமூடி அணிந்த நபர் உள்ளே வந்து பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து செந்தில் வீரபாண்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், செந்தில் கடைக்கு அருகில் இருந்த இருசக்கர வாகன நிதி நிறுவனத்தின் மேற்கூரையும் பிரிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அங்கு எந்த பொருளும் திருடப்படவில்லை. இதையடுத்து, காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்தடுத்த இரண்டு கடைகளின் மேற்கூரை பிரித்து கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் , அப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.