ஈரோடு,
விவசாய நிலங்களின் வழியாக உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திங்களன்று பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் விவசாய நிலங்களின் வழியாக மின் கோபுரங்கள் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் சார்பில் திங்களன்று பல்வேறு மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம், திண்டல் பகுதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் எ.எம்.முனுசாமி, பெருந்துறை தாலுகா செயலாளர் முத்து பழனிசாமி, பி.எஸ்.மணியன் தலைமையில் ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட திரண்டனர். அப்போது, இந்த ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்கள் குறித்து சங்கத் தலைவர்கள் பத்திரிகையாளர்களிடம் பேட்டி அளித்துக் கொண்டிருக்கையிலேயே காவல்துறையினர் அராஜகமான முறையில் விவசாயிகள் சங்கத் தலைவர்கள் உள்ளிட்டோரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்தனர்.

மேலும், பேட்டி எடுத்துக்கொண்டிருந்த பத்திரிகையாளர்களிடம் துணை காவல் கண்காணிப்பாளர் டி.எஸ்.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் காவல் ஆய்வாளர் மணிராஜ் ஆகியோர், பேட்டி எடுத்தால் உங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் எனஅராஜக முறையில் எச்சரித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த செய்தியாளர்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதேகோரிக்கைகளை வலியுறுத்தி பவானி வட்டாட்சியரிடம் சிபிஐ மாநிலக்குழு உறுப்பினர் வி.பி.குணசேகரன், சிபிஎம் தாலுகா செயலாளர் எ.ஜெகநாதன் ஆகியோர் தலைமையில் விவசாயிகள் மனு அளித்தனர்.

எஸ்.பி – ஆட்சியரிடம் புகார்;
இந்நிலையில், காவல்துறையினரின் இந்த அத்துமீறல்கள் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன் மற்றும் அனைத்து விவசாயிகள் அமைப்புகளின் நிர்வாகிகள் திங்களன்று மதியம் மாவட்ட கண்காணிப்பாளர் சக்திகணேஷை நேரில் சந்தித்து முறையிட்டனர். மேலும், இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் எஸ்.பிராபகரை சந்தித்தும் மனு அளித்தனர்.

கோவை; 
கோவை மாவட்டம் கருமத்தாம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக, இந்த போராட்டத்திற்கு முறைப்படி அனுமதி கோரியிருந்தபோதும், கடைசி நேரத்தில் காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இருப்பினும் தடையை மீறி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தை அடுத்த வெப்படையில் அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.பெருமாள் தலைமை வகித்தார். தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் செ.நல்லாக்கவுண்டர் சிறப்புரையாற்றினார். முன்னதாக, இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திடீரென காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இருப்பினும் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

சேலம்:
இதேகோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்டம், சங்ககிரி கோட்டாட்சியரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.ராமமூர்த்தி, மாநில துணைத் தலைவர் பி.டில்லிபாபு ஆகியோர் தலைமையில் விவசாயிகள் மனு அளித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.