புதுதில்லி:
‘மோடி கேர்’ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறும் நோயாளிகளின் உயிருக்கு உத்தரவாதம் இருக்கிறதா? என்று மத்திய அரசுக்கு இந்திய மருத்துவ சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

‘மோடி கேர்’ திட்டம் சாத்தியமற்றதாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
‘மோடி கேர்’ எனப்படும் காப்பீட்டுத் திட்டத்தின் அடிப்படையில், தேசிய உடல்நலப் பாதுகாப்பு இயக்கமானது, மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை, இருதய பைபாஸ் அறுவைச் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு அறுவைச் சிகிச்சைகளுக்கு கட்டண விவரங்களை அண்மையில் வெளியிட்டிருந்தது. சுமார் 205 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையில், சிகிச்சைக்கான கட்டணங்கள் வழக்கமான கட்டணங்களை விட குறைவாக இருந்தன.குறிப்பாக, மூட்டுமாற்று அறுவைச் சிகிச்சைக் கட்டணத்திற்கு ரூ. 9 ஆயிரம், இதய பை-பாஸ் அறுவைச் சிகிச்சைக்கு ரூ. 40 ஆயிரத்திலிருந்து ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம், சிசேரியன் மூலமான மகப்பேறு சிகிச்சைக்கு ரு. 9 ஆயிரம், இருதய ஆஞ்சியோ பிளாஸ்ட் மற்றும் புற்றுநோய் சிகிச்சைக்கு தலா ரூ. 50 ஆயிரம் என கட்டணங்கள் குறிப்பிடப்பட்டு இருந்தன.
இதற்குத்தான் தற்போது இந்திய மருத்துவ சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

‘மோடி கேர்’ திட்டத்தின் கீழ், 10 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகளிலும் கூட சிகிச்சை பெறலாம் என்ற அம்சத்தைத் தாங்கள் பாராட்டினாலும், மேலே கூறியுள்ளபடி இவ்வளவு குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்க முடியும் என்பதை ஒப்புக்கொள்ள முடியாது என்று மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

‘ஒருவேளை இத்திட்டத்தில் குறிப்பிட்ட கட்டணத்தின்படியே சிகிச்சை அளிக்கப்படுவதாக வைத்துக்கொண்டாலும், அந்த சிகிச்சை மிகவும் குறைந்த தரம் கொண்டதாகவே இருக்க முடியும்’ என்றும் மருத்துவ சங்கம் குறிப்பிட்டுள்ளது.மேலும்,‘தனியார் மருத்துவமனைகளில் குறைந்தபட்ச லாபமாக 15 சதவிகிதம் மட்டுமே வாங்கப்பட்டாலும் கூட ஒரு சில அறுவைச் சிகிச்சைகளுக்கு கோடிக்கணக்கில் கட்டணம் ஆகிறது’ என்பதை சுட்டிக்காட்டியுள்ள இந்திய மருத்துவ சங்கம், ‘எனவே, ‘மோடி கேர்’ திட்டத்தில் குறைந்த கட்டணம் என்பதை நம்பி, நோயாளிகள் தவறான சிகிச்சைக்கு உள்ளாகி விடக் கூடாது; இதற்கான உத்தரவாதத்தை அளிப்பது அரசின் கடமை’ என்றும் மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.