புதுதில்லி,

உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்டும் அனைத்து பொதுநல வழக்குகளையும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அல்லது அவர் அடங்கிய அமர்வு மட்டுமே விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் இந்திய வரலாற்றில் முதன்முறையாக உச்சநீதிமன்ற நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப், மதன் பி லோகூர் ஆகிய நான்கு பேரும் செய்தியாளர்களை சந்தித்தனர்.  உச்ச நீதிமன்ற  நிர்வாகம் சரியாக நடைபெறவில்லை, ஜனநாயகம் இல்லை. வழக்குகள் ஒதுக்குவதில் அரசியல் தலையீடு இருப்பதாகவும், வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் குற்றம்சாட்டினர். இந்திய உச்சநீதிமன்ற நீதிபதிகளின் இந்த குற்றச்சாட்டு உலகையே உற்றுநோக்க வைத்தது.
இந்நிலையில் தற்போது கோடை விடுமுறைக்கு பிறகு ஜூலை 2ல் உச்சநீதிமன்றம் திறக்கப்படுகிறது. உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை எந்தெந்த நீதிபதிகள் இனி விசாரிப்பார்கள் என்பது தொடர்பான அறிவிப்பு வெளிவந்துள்ளது.

அதில் உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்படும், அனைத்து பொதுநல வழக்குகளையும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவோ அல்லது அவரது தலைமையிலான அமர்வு மட்டுமே இனி விசாரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சமூகநீதி தொடர்பான புகார்கள், தேர்தல் முறைகேடு புகார்கள், ஆட்கொணர்வு மனு, நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் ஆகியவற்றையும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த எதேச்சதிகார போக்கிற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் சமூக ஆர்வலர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் வழக்கு ஒதுக்கீடு செய்வதில் உள்ள நடைமுறைக்கான வரைவு அறிவிக்கையை கடந்த பிப்ரவரியில் உச்சநீதிமன்றம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: