நூறு வீடுகள் கொண்ட ஒரு கிராமத்தை கற்பனை செய்து கொள்ளுங்கள். வயல்வெளி, காடு, மலை, மைதானம், கடைகள், சிறு குறு ஆலைகள், நீர்வெளி என சகலமும் கொண்ட கிராமம் அது.

நூறு குடும்பங்களைக் கொண்ட கிராமத்தின் மொத்த சொத்தும், சராசரியாக 30 குடும்பங்களிடம் மட்டுமே இருக்கும் (இன்னும் குறைவானவர்களிடம் இருக்கவே வாய்ப்பு அதிகம்) ஆனால் அந்த 30% நிலத்தை நம்பியே மீதமுள்ள 60% மக்களின் அடிப்படை வாழ்க்கை இருக்கும்.

அரசின் ஏதோ ஒரு திட்டத்திற்காக நிலத்தை கையகப்படுத்தும் போது முழுமையாக 30% குடும்பங்களிடமிருந்து நிலத்தை விலை கொடுத்து வாங்கலாம். அதற்கே எதிர்ப்புகள், குறைவான விலை, விவசாயம் செய்யும் நிலங்களை எடுக்க எதிர்ப்பு என பல செய்திகளை பார்க்கிறோம். ஆனால் நில உரிமையாளர்களுக்கு சட்டபூர்வமாகவாவது ஒரு தொகை கிடைக்கும். அதைச்சுற்றியே செய்திகளும் உலா வருகின்றன.

ஆனால் நிலம் கையகப்படுத்துதலில் உள்ள முக்கிய சிக்கல் என்பது வேறு. இந்த நிலங்களில் கூலி வேலை பார்த்தவர்கள், மளிகைக் கடை வைத்திருந்தவர்கள், சிறுகுறு ஆலைகளில் வேலை பார்த்துக் கொண்டு வீடுகளில் வாடகைக்கு இருந்தவர்கள் என அந்த நிலத்தை சார்ந்திருந்த, ஆனால் சொத்து என்று ஏதுமில்லாத மூன்றில் இரண்டு பங்கு மக்கள் அகதிகளாக இன்னொரு இடத்தை நோக்கி நகரப் போகிறார்கள்.

நிலம் கையகப்படுத்துதல் சட்டங்களில் அரசின் திட்டத்தால் ஏற்படப்போகிற சமூக பொருளாதார நிலையை கணக்கில் கொண்டு சொத்து ஏதுமில்லாத இந்த வகை மக்களின் வாழ்வாதாரத்திற்கு அரசு என்ன செய்யப்போகிறது என்பது குறித்த தெளிவான வரைமுறைகள் இல்லை.

நிலம் என்பது உரிமையாளருக்கு மட்டுமானதில்லை. அது சமூகத்துக்கானது. நிலம் என்பது ஒருவகை முதலீடு- நம்பிக்கை. நிலம் என்பது அதிகாரம். நிலத்தை பறிப்பதென்பது அதிகாரத்தை பறிப்பதற்கு சமம்.

நிலம் இல்லாதவனிடம் எதையும் பறிக்க முடியாதென்பதில்லை, பறிப்பதற்கு உயிரும் அதுவரை அவன் வாழ்ந்த சுயமரியாதையான வாழ்க்கையும் இருக்கிறது.

Nelson Xavier

Leave a Reply

You must be logged in to post a comment.