திருப்பூர்,
திருப்பூரில் செயல்படும் மருந்துக் கடைகளில் அரசால் அனுமதிக்கப்பட்ட மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றனவா என்று ஆய்வு செய்யுமாறு மாவட்ட ஆட்சியருக்கு நுகர்வோர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக திங்களன்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமியிடம் நல்லூர் நுகர்வோர் நலமன்றத் தலைவர் என்.சண்முகசுந்தரம் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூரில் 700 முதல் 900 மருந்துக் கடைகள் சிறிதும், பெரிதுமாக செயல்பட்டு வருகின்றன. சில மருத்துவர்கள் எழுதித்தரும் மருந்துகள் அவர்களது மருத்துவமனைகளில் மட்டுமே கிடைக்கின்றன. மருந்துக் கடைகளில் இந்த மருந்துகள் கிடைப்பதில்லை. மீண்டும் அந்த மருந்து, மாத்திரைகள் தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட மருத்துவரிடம் சென்று மருத்துவர் கட்டணம் செலுத்தி மறுபடியும் பரிசோதனை செய்தால் தான் அவர்கள் நடத்தும் மருந்தகங்களில் அந்த மருந்து மாத்திரைகளை வாங்க முடிகிறது. இதற்காக நோயாளிகள், பொது மக்கள் ரூ.150 முதல் ரூ.250 வரை கூடுதலாக கட்டணமாக செலவிட நேரிடுகிறது.

மருத்துவர் கட்டணம் தர இயலாமல் அதே மருந்துகளை வெளி மருந்துக் கடைகளில் கேட்டு வாங்கினால் அதே மருந்து வேறு நிறுவனத்தின் பெயரில்தான் இருப்பதாகக் கூறி, அதை தருகின்றனர். பரிசோதித்து அறியாத நிலையில் இந்த மருந்துகளை வாங்கிப் பயன்படுத்த வேண்டிய நிலை நோயாளிகளுக்கு ஏற்படுகிறது. எனவே, தனியார் மருத்துவர்கள் தங்கள் மருத்துவமனை சார்ந்த மருந்தகங்களில் விற்பனை செய்யும் மருந்துகள் அரசின் அனுமதி, உரிமம் பெற்றதுதானா, அதில் மருந்தை பயன்படுத்துவதற்கான காலக்கெடு, விலை உள்ளிட்ட விபரங்கள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டு இருக்கின்றனவா என்றும், மருந்தகங்களிலும் அரசின் அனுமதி பெற்ற மருந்துகள் தான் விற்பனை செய்யப்படுகின்றனவா என்றும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்ய வேண்டும்.

அனுமதி பெறாத மற்றும் போலியான மருந்துகள் விற்பனை செய்யும் மருத்துவர்கள், மருந்துக்கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து அவற்றை மூடுவதற்கு உத்தரவிட வேண்டும் என்றும் நல்லூர் நுகர்வோர் நல மன்றம் சார்பில் சண்முகசுந்தரம் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave A Reply