திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் தலித் மக்கள் குடும்ப திருமணங்கள் உள்ளிட்ட விழாக்களுக்கு தனியார் திருமண மண்டபங்கள் வாடகைக்குத் தர மறுக்கும் நிலை உள்ளது. அவர்களுக்கு மண்டபங்கள் கிடைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் திருப்பூர் மாவட்ட 3ஆவது மாநாடு வலியுறுத்தியுள்ளது.

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் திருப்பூர் மாவட்ட மாநாடு ஊத்துக்குளி நகரில் நீட் எதிர்ப்பு போராளிகள் அரங்கில் ஞாயிறன்று எஸ்.ஆர்.மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது. வரவேற்புக்குழுத் தலைவர் கை.குழந்தைசாமி வரவேற்றார். இம்மாநாட்டை மாநில துணைப்பொதுச் செயலாளர் யு.கே.சிவஞானம் தொடங்கி வைத்தார். வேலையறிக்கையை மாவட்டச் செயலாளர் ஆர்.குமார் முன்வைத்தார். மாநாட்டில் மொத்தம் 250க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். ஆதித்தமிழர் பேரவை மாநில துணைப் பொதுச் செயலாளர் சு.ஆனந்தன், தலித் விடுதலைக் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் எம்.பி.செங்
கோட்டையன், ஆதித்தமிழர் ஜனநாயகப் பேரவையின் நிறுவனத் தலைவர் அ.சு.பவுத்தன், விடுதலைச் சிறுத்தைகள் வடக்குத் தொகுதி செயலாளர் ஏ.பி.ஆர்.மூர்த்தி, ஆதித்தமிழர் கட்சியின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் மா.ஈழவேந்தன், சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டச் செயலாளர் வை.ஆனந்தன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

இம்மாநாட்டில் பிரதிநிதிகள் விவாதத்தைத் தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டத்தைப் பாதுகாக்க அவசரச் சட்டம் இயற்ற வலியுறுத்தி தமிழகம் தழுவிய ஜூலை 2 ரயில் மறியல் போராட்டத்தில் திருப்பூர், உடுமலையில் ஆயிரக்கணக்கானோரை திரட்டி முழு வெற்றி பெறச் செய்வது, முதலிபாளையம் சிட்கோ தொழிற்பேட்டையில் தாட்கோ தொழில் கூடங்களை தலித் தொழில் முனைவோருக்கு ஒதுக்க வேண்டும், காலியிடத்தில் அடுக்குமாடி தொழிற்கூடங்கள் கட்டி திருப்பூர் இளைஞர்களுக்கு வழங்க வேண்டும்.  மேலும், காங்கயம் தாயம்பாளையத்தில் தலித் மக்களுக்கு முடி திருத்தம் செய்ய மறுப்பதை கண்டித்தும், மாவட்டத்தில் தெற்கு அவிநாசிபாளையம் உள்பட பல இடங்களில் தலித் மக்கள் இல்ல விழாக்களுக்கு திருமண மண்டபங்கள் தர மறுப்பதை கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதுடன், தலித் மக்களுக்கு எதிரான இந்த போக்குகளைக் களைய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டது.

புதிய நிர்வாகிகள் தேர்வு:
இம்மாநாட்டில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் திருப்பூர் மாவட்டத் தலைவராக ஆர்.குமார், மாவட்டச்செயலாளராக ச.நந்தகோபால், மாவட்டப் பொருளாளராக ஏ.பஞ்சலிங்கம் உள்பட 18 நிர்வாகிகளும், 38 பேர் கொண்ட மாவட்டக்குழுவும் தேர்வு செய்யப்பட்டது. மாநாட்டை நிறைவு செய்து வைத்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலப் பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் நிறைவுரை ஆற்றினார். பிரதிநிதிகள் மாநாட்டு முடிவில் ஊத்துக்குளி வட்டச் செயலாளர் கே.எஸ்.ராமசாமி நன்றி கூறினார்.மாநாட்டு முடிவில் மாலையில் ஊத்துக்குளி நகர் ஈஸ்வரன் கோயில் திடலில் பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. வரவேற்புக்குழுத் தலைவர் கை.குழந்தைசாமி தலைமையில் நடை பெற்ற இக்கூட்டத்தில் பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ், துணைப் பொதுச் செயலாளர் யு.கே.சிவஞானம், மாவட்டத் தலைவர் ஆர்.குமார், மாவட்டச் செயலாளர் ச.நந்தகோபால், ஆதித்தமிழர் ஜனநாயகப் பேரவை நிறுவனத் தலைவர் அ.சு.பவுத்தன், தலித் விடுதலைக் கட்சி துணைப் பொதுச் செயலாளர் விடுதலைச்செல்வம், வி.சி.க., செய்தித் தொடர்பாளர் இரா.நாதன் ஆகியோர் உரையாற்றினர்.அவிநாசி அதிர்வுகள் கலைக்குழு, திருப்பூர் கலைக்குழுக்களின் தப்பாட்டம், இசைப் பாடல்கள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.