திருப்பூர்,
திருப்பூரில் அரசு பள்ளியில் நவீன வசதிகள் இருந்தும் வகுப்பறை பற்றாக்குறையால் ஆசிரியர்களே வாடகை கொடுத்து தனியார் கட்டிடத்தில் வகுப்புகள் நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பாரப்பாளையம் பகுதியில் ஆரம்பப் பள்ளி 1962 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தப் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்ததால், நடுநிலைப்பள்ளியாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அரசு பள்ளி என்றாலே பொதுமக்களின் பார்வையில் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் இருப்பது, கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பற்றாக்குறையோடு இருந்து வந்துள்ளன. இந்த சூழ்நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு பள்ளியின் தலைமையாசிரியராக அகிலா பதவியேற்றார். அவர் முயற்சியால் அரசு மற்றும் தனியார் அமைப்பின் உதவியோடு பள்ளிக்கு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக கடந்த இரு வருடங்களாக தனியார் பள்ளிகளுக்கு இணையான ஸ்மார்ட் கிளாஸ் தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பள்ளியில் பல நவீன வசதிகள் இருந்தாலும் வகுப்பறை பற்றாக்குறையாக இருந்தது. 2018 ஆம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கை அதிகமானதால், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் சம்பளத் தொகையிருந்து ஒரு பகுதியை கொடுத்தனர். இதனால் பள்ளிக்கு அருகிலே தனியார் கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து அங்கு கூடுதல் வகுப்புகளை நடத்தி வருகின்றனர். மேலும், மாணவ மாணவிகளுக்கு கராத்தே, யோகா, பரதநாட்டியம் போன்ற வகுப்புகள் விடுமுறை தினங்களில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 240 பேர் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில், கூடுதல் வகுப்பறைகளுக்கு கட்டடம் கட்ட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் மூலம் மனு அளித்தனர். இதனால், மானியக் கோரிக்கையில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அதற்கான பணிகள் நடைபெற இருப்பதாக அதிகாரி தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதேபோல், பள்ளியில் விளையாட்டு மைதான வசதி குறைவாக இருப்பதாகவும் அதனை விரிவுபடுத்தி கொடுக்கவும், கணினி ஆய்வகம், நூலகம் மற்றும் பற்றாக்குறையாக உள்ள வகுப்பறைகளையும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என அப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு இணையாக தரம் உயர்த்த வேண்டும். நகரங்களுக்கு அப்பால் செயல்பட்டு வரும் பள்ளிகளை அரசு கவனத்தில் கொண்டு செயல்பட்டால், பெற்றோர்கள் அரசு பள்ளியை நோக்கி வருவார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

– த.அருண் கார்த்திக்

Leave A Reply

%d bloggers like this: