மும்பை;
மகாராஷ்டிரா மாநிலத் தலைநகர் மும்பையில் ஜூன் மாதம் தொடக்கத்தில் இருந்தே கனமழை பெய்து வருகிறது. இந்த ஆண்டு வழக்கத்துக்கு முன்பே தொடங்கிய மழை தனது இரண்டாவது ‘தாக்குதலை’ தொடங்கியுள்ளது.

இதுதொடர்பாக மும்பை வானிலை ஆய்வு மைய இயக்குநர் அஜய்குமார் கூறுகையில், “கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வந்தாலும், ஞாயிறு இரவு முதல் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்துள்ளது. ஜூன் 24 முதல் மும்பையில் 231.4 மிமீ மழை பெய்துள்ளது. தற்போதைய பருவத்தில் மும்பையில் பதிவு செய்யப்பட்ட அதிகப்படியான மழைப் பொழிவு இதுவாகும். ஜூன் 24 பிற்பகல் முதல் மழை தீவிரமடைந்துள்ளது. மேலும், மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது, ” எனத் தெரிவித்தார்.நாட்டின் வர்த்தகத் தலைநகரமான மும்பையில் கனமழை பொழிவதால் சாலைகளிலும், தெருக்களிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும், மழையால் மும்பை மாநகரப் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் மரங்கள் சாய்ந்துள்ளன. தெற்கு மும்பையில் அதிகாலை 4 மணியளவில் ஒரு கட்டிடம் சரிந்து விழுந்தது. இதனால், 15க்கும் மேற்பட்ட கார்கள் சேதமடைந்துள்ளன.

மும்பை மற்றும் தானே பகுதிகளில் ஒரு சிறுவன் உட்பட நான்கு பேர் இதுவரை உயிர் இழந்துள்ளனர். ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்து ரயில்களும் தாமதமாகவே புறப்பட்டுச் செல்கின்றன.இந்நிலையில் திங்கள் காலை 5.30 மணி வரை மும்பை பகுதியில் பெய்துள்ள மழையின்

அளவை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கோலாபோ பகுதியில் 90 மிமீ மழையும், சாந்தாகுரூஸ் பகுதியில் 195 மிமீ மழையும் பதிவாகியுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மும்பை மக்கள் வீட்டிலேயே இருக்கும் படி இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.மேலும், பொதுமக்களுக்கு உதவும் வகையில் மும்பை காவல்துறையும், தேசிய பேரிடர் மேலாண்மை குழுவும் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குஜராத் மாநிலத்தில், அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் தொடர்ந்து கனமழை பெய்வதால் பல பகுதிகள் நீரில் மூழ்கி உள்ளன. தண்டவாளங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால் ரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், ரயில் இருப்புப்பாதைகளை சீரமைக்கும் பணிகள் நடந்து வருவதாகவும் மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.