நாகர்கோவில்;
சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் பதியில் தமிழ்நாடு அரசின் இந்து
அறநிலையத்துறையின் தலையீடுக்கு அய்யா வழி மக்கள் ஆவேசத்துடன் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் கோவில் நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதிக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து வணங்கி வருகின்றனர். இந்நிலையில் இந்து அறநிலையத்துறையினர் பதி நிர்வாகத்தை கைப்பற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதை எதிர்த்து பதி நிர்வாகிகள் உண்ணாவிரதம், மற்றும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். ஏற்கனவே சுவாமிதோப்பு பதிக்கு தக்காராக நியமிக்கப்பட்டுள்ள இந்து அறநிலையத்துறை அதிகாரி பொன்னி தலைமையிலான குழுவினர் சுவாமிதோப்பு தலைமை பதிக்கு இருமுறை சென்றபோது தடுத்து நிறுத்தப்பட்டு பிரச்சினை ஏற்பட்டது. இதுதொடர்பாக காவல் துறையினர் பதி நிர்வாகிகள் மீது ஏற்கனவே வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும் வகையில் காவல்துறையினர் உதவியுடன் கடந்த 5 நாட்களாக சுவாமிதோப்பு பதி நிர்வாகத்தின் வரவு, செலவுகளை கண்காணித்து வருகின்றனர். மேலும், கோயிலுக்கு வரும் பக்தர்கள் கொடுக்கும் காணிக்கை பணத்திற்கு ரசீது வழங்கி வருகின்றனர். அந்த ரசீதில் இந்து சமய அறநிலையத்துறை, அருள்மிகு நாராயணசுவாமி திருக்கோயில், சுவாமிதோப்பு, குமரி மாவட்டம் என அச்சிடப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமையன்று சுவாமிதோப்பு தலைமை பதியில் குமரி மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி வெளியூர்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். அய்யாவிற்கு சுருள்வைத்து வழிபாடு செய்வதற்கு 20 ரூபாய் ரசீது பெற்ற நிலையில் உச்சிப்படிப்பு முடிந்ததும் பக்தர்களுக்கு இனிமம் எனப்படும் பிரசாதம் வழங்குவது வழக்கம். இதை இந்து அறநிலையத்துறையினர் வழங்கவில்லை என பக்தர்கள் பதி நிர்வாகிகளிடம் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து பதி நிர்வாகிகள், இந்து அறநிலையத்துறை தக்கார் உட்பட அதிகாரிகளை முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பதியினுள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பிரச்சினை நிலவியது.

அப்போது இனிமம் வழங்கும் நடைமுறை தெரியாது. வரும் காலத்தில் கடைபிடிப்பதாக இந்து அறநிலையத்துறையினர் எழுதிக் கொடுத்து உறுதியளித்ததை தொடர்ந்து பிரச்சினை முடிவுக்கு வந்தது. இச்சம்பவம் தொடர்பாக பதியின் தக்கார் பொன்னி தென்தாமரைகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து காவல் துறையினர் பதி நிர்வாகிகள் பாலஜனாதிபதி, பால்பையன், வைகுந்த், யுகேந்த் ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: