ஸ்ரீநகர்;
ஜம்மு – காஷ்மீர் மாநிலம், கதுவா-வைச் சேர்ந்த 8 வயதுச் சிறுமி, பாலியல் வன்கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கிய ஒன்றாகும். இந்நிலையில், இந்த கொலைக்கு முன்னதாக சிறுமிக்கு மயக்க மருந்து அளிக்கப்பட்டு இருந்ததும், மருந்தின் அளவு அதிகமானதால், சிறுமி கோமா நிலைக்குப் போனதும் தெரிய வந்துள்ளது.
தடயவியல் துறையினர் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

காஷ்மீர் மாநிலம், கதுவா மாவட்டத்தில், கடந்த ஜனவரி மாதம் 8 வயது குழந்தை, சங்- பரிவாரத்தைச் சேர்ந்த கும்பலால் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த துயரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், சம்பவம் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களின் கைதுக்கு எதிராகவும், குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய விடாமலும், காஷ்மீர் மாநில பாஜக அமைச்சர்களும், சங்- பரிவார அமைப்பினரும் பெரும் கலகத்தில் ஈடுபட்டனர். அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்து, மெகபூபா முப்தி அரசை மிரட்டினர். தற்போது ஆட்சியையே கவிழ்த்துள்ளனர்.

மறுபுறத்தில், நீதியைக் கொலை செய்து, குற்றவாளிகளை தப்பவிடும் முயற்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அதனொரு பகுதியாக, கடந்த முறை இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ‘சிறுமி தனக்கு துன்பம் இழைக்கப்படும் போது சத்தமோ, கூச்சலோ போடாமல் இருந்திருக்க முடியுமா? அக்கம்பக்கத்தில் இருந்தவர்களின் உதவியை நாடாமல் எப்படி இருந்திருக்க முடியும்?’ என்று ஈவிரக்கமற்ற கேள்வி ஒன்றையும், வழக்கறிஞர்கள் மூலம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பினர் எழுப்பினர்.

இதையடுத்து, குற்றப்பிரிவு போலீசார், தடவியல் நிபுணர்களிடம் சிறுமி படுகொலை தொடர்பான ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். தடவியல் வல்லுநர்களும், தற்போது அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர். அதில், கொலை செய்யப்படுவதற்கு முன்னதாக சிறுமி கோமா நிலையில் இருந்ததாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
அதாவது, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள், அதிக அளவிலான மயக்க மருத்தைச் சிறுமிக்கு அளித்ததாகவும், இதனால் மயக்க நிலைக்குச் சென்ற சிறுமி, பின்பு கோமா நிலையை அடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.சித்ரவதைக்கு ஆளானபோது சிறுமி ஏன், சத்தம் போடவில்லை என்று, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு தடவியல் அறிக்கை தக்க பதிலடியாக அமைந்துள்ளது

Leave A Reply

%d bloggers like this: