திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆட்சியர் கே.எஸ்.பழனிச்சாமி தலைமையில் திங்களன்று வாரந்திர மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடந்தது. இதில், பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.

அமராவதி பாசன திட்டம், சோழமாதேவி கிராம ராஜவாய்க்கால் நீரினைப் பயன்படுத்துவோர் சங்கம் சார்பில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மடத்துக்குளம் பகுதியில் இந்தாண்டு அரசு குடிமராமத்து பணிக்காக ரூ. 4 லட்சத்து 50 ஆயிரம் ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணியை செய்வதற்கு பொதுப் பணித்துறையின் செயற்பொறியாளர் அறிவுறுத்தலின் படி, விவசாயிகளின் பங்களிப்பாக ரூ.45 ஆயிரம் வங்கியில் செலுத்தி, அதற்கான சீட்டை செயற்பொறியாளர் அலுவலகத்தில் ஒப்படைத்தோம். பின்னர், குடிமராமத்து பணிகள் ஆரம்பிக்கும்படி அதிகாரிகள் கூறியதையடுத்து, கடந்த 22ம் தேதி தூர்வாரும் பணிகள் மேற்கொண்டோம். சுமார் 4 மணி நேரம் வேலை செய்த நிலையில் மடத்துக்குளம் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் எந்தவித காரணமும் கூறாமல் பணிகளை நிறுத்தமாறு கூறினார். இதையடுத்து பணிகள் கைவிடப்பட்டது. தற்போது குறுவை நெல் சாகுபடி செய்ய வரும் அக்டோபர் மாதம் வரை உகந்தநாளாக உள்ளது. காலம் கடந்து சாகுபடி செய்தால் வடகிழக்கு பருவ மழையால் பெரும் சேதம் ஏற்படும். ஆகவே, தூர்வரும் பணி தொடர அனுமதி அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

ரேசன் கடை:
திருப்பூர் கல்லங்காடு பகுதி பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் ஆயிரம் குடும்பங்களை சேர்ந்தோர் வசித்து வருகின்றன. இந்தப்பகுதி மக்கள் பலவஞ்சிபாளையம், பொம்மாண்டம்பாளையம், வீரபாண்டி உள்ளிட்ட ரேசன் கடைகளில் பொருள் வாங்கி வருகின்றோம். இப்பகுதியில் இருந்து ரேசன் கடை மிகவும் தூரமாக உள்ளது. மேலும், அனைவருக்கும் போதுமான பொருள்கள் கிடைப்பதில்லை. எனவே, ஆயிரம் குடும்பங்கள் வசிக்கக்கூடிய பகுதிக்கு புதிய ரேசன் கடை அமைத்து தர உதவ வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.

குடிநீர்:
திருப்பூர் பட்டம்பாளையம் பொதுமக்கள் சார்பில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் கணக்கம்பாளையம், காளிபாளையம், பொங்குபாளையம் ஆகிய ஊர்களுக்கு மட்டும் நான்காவது குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் கிடைக்கிறது. மேலும், திருப்பூர், பெருமாநல்லூரை அடுத்த வடக்கு பகுதிகளுக்கு போதுமான குடிநீர் வசதியில்லாததால் வறட்சி பகுதியாக இருக்கிறது. இதனால், ஆழ்துளை கிணற்று நீரை மட்டும் வைத்து தங்களது தேவைகளை சரி செய்து வருகின்றனர். எனவே, இப்பகுதிகளுக்கு நான்காவது குடிநீர் கிடைக்க உதவி செய்ய வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.