கோவை,
தமிழக அரசு மற்றும் காவல்துறையின் சமீபத்திய கைது நடவடிக்கைகள் கருத்துரிமையை பறிக்கும் நடவடிக்கைகளாகவே உள்ளது என இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார்.

கோவையில் கடந்த ஜூன் 8 ஆம் தேதியன்று புதிய தலைமுறை தொலைக்காட்சி எஸ்என்ஆர் அரங்கில் வட்டமேசை விவாதம் நடைபெற்றது. இதில் திரைப்பட இயக்குனர் அமீர் பங்கேற்று பேசும்போது, பாஜகவினர் ரகளையில் ஈடுபட்டனர். இதனையடுத்து சர்ச்சைக்குறிய கருத்துகளை பேசியதாக பீளமேடு காவல்துறையினர் அமீர் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிந்தனர். இது தொடர்பாக முன்ஜாமீன் கோரி அமீர் தாக்கல் செய்திருந்த மனு திங்களன்று கோவை 3 வது கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் அமீர் தரப்பில் வழக்கறிஞர் பவானி மோகன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதிசஞ்சய் பாபா, அமீருக்கு முன் ஜாமீன் அளித்து உத்தரவிட்டார். இதையடுத்து அமீர், பீளமேடு காவல்நிலையத்திற்கு சென்றார். அங்கு ஒரு மணி நேர விசாரணைக்கு பின்னர் அவர் பேசுகையில், காவல்துறை அனுப்பிய சம்மனை தொடர்ந்து நேரில் ஆஜராகி காவல் துறையினரின் கேள்விகளுக்கு பதில் அளித்தேன். எனது முன்ஜாமீன் குறித்து நீதிமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கூட வழக்கறிஞர்களிடம் நீதிபதி, விவாதநிகழ்ச்சியில் நான் என்ன தவறாக பேசி இருக்கிறேன் என கேள்வி எழுப்பி இருக்கின்றார். எங்கள் தரப்பில் இருந்து பாஜகவினர் மீது புகார் கொடுத்து இருக்கிறோம். மனுவை பதிவு செய்வதாக பீளமேடு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பத்திரிகையாளர் குறித்து அவதூறாக கருத்து பதிவு செய்த எஸ்.வி.சேகரை கைது செய்யாத காவல்துறையினர் மன்சூர் அலிகான், இயக்குநர் கவுதமன் ஆகியோரை கைது செய்துள்ளதே என்கிற கேள்விக்கு பதில் அளிக்கயில், கைது செய்வதில் காவல்துறையினரின் பாரபட்சமான நடவடிக்கை என்பது அரசாங்கங்களின் இயல்பு. சமீபத்திய தமிழக அரசு மற்றும் காவல்துறையினரின் கைதுகள் கருத்துரிமையை பறிக்கும் நடவடிக்கைகளாகவே இருக்கிறது. ஆனால் இந்த கைது நடவடிக்கைகளை நீதிமன்றங்கள் ஏற்பதில்லை என்பது ஆறுதல் அளிக்கிறது என அமீர் கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: