ஆண்டிபட்டி;
தமிழகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 சட்டப்பேரவை உறுப்பினர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடியிருப்பது சரி தான் என்றாலும் தனது நிலையில் எவ்வித மாற்றமும் இல்லை என்று தினகரன் அணியைச் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஆண்டிபட்டி அருகே திங்கள்கிழமை, தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
சட்டபேரவை உறுப்பினர் பதவியை வாபஸ் பெறுவது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளேன். மீதமுள்ள 17 சட்டப்பேரவை உறுப்பினர்கள் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றது சரிதான். ஏனென்றால் தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்தால் நிச்சயமாக எங்களுக்கு சாதகமாக வராது. அதனால் தான் வேறு மாநிலத்திற்கு விசாரணை மாற்ற வேண்டும் என கேட்டு உள்ளனர். அதே நேரத்தில் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பை வழங்கினால் தொகுதி மக்களுக்கு நல்லது நடக்கும் என்று நம்புகிறோம்.

எனது தகுதி நீக்க வழக்கை வாபஸ் பெறுவதில் 4 விதமான சிக்கல்கள் உள்ளது. 2 நீதிபதிகள் அமர்வில் மனுவை வாபஸ் வாங்குவதா அல்லது 3 வது நீதிபதியிடம் வாபஸ் வாங்குவதா என வழக்கறிஞர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறேன். ஒருவேளை மனுவாபஸ் பெறப்பட்டால் ஆண்டிப்பட்டி தொகுதி காலியாக உள்ளதாக உடனடியாக அறிவிக்கப்படும் என்று நம்பிக்கை இல்லை. அப்படியே அறிவித்தாலும் உடனடியாக தேர்தல் வராது, நாடாளுமன்ற தேர்தலோடு தான் தேர்தல் நடக்கும் என்றும் கூறுகின்றனர்.

தற்போதைய நீதிமன்ற உத்தரவின்படி நான் தேர்தலில் நிற்க முடியும் என்றாலும் என்னை தேர்தலில் நிற்கவிடாமல் அரசு தடுப்பதற்கு அதிகமான வாய்ப்பு உள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலர் மூலம் என் வேட்புமனுவை தள்ளுபடி செய்யவும் வாய்ப்புள்ளது, அதனால் என்னுடைய மனுவை வாபஸ் வாங்கும் நடவடிக்கையில் கொஞ்சம் அவகாசம் தேவைபப்படுகிறது.

மேலும், தினகரனுடன் எவ்வித மோதலும் இல்லை இனிவரும் காலங்களில் எல்லாம் வெளிப்படைத் தன்மையாக தான் நடக்க வேண்டும். அந்த வகையில் எங்களின் கருத்து சுதந்திரத்திற்கு எங்கள் துணை பொது செயலாளர் வாய்ப்பு கொடுத்துள்ளார். அந்த வகையில் நான் ராஜினாமா செய்கிறேன் என்று கூறியதற்கு உடனடியாக சரி என்றார். ஜனநாயக முறைப்படி வெளிப்படையாக இருக்கிறோம், அதைத்தான் மக்களும் விரும்புகின்றனர்.

ஆளுநர் ஆய்வு நடத்துவதால் எந்த அரசு பணி எளிதாகியுள்ளது என்பதை அமைச்சர் ஜெயக்குமார் விளக்க வேண்டும். ஜெயக்குமார் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி வருகிறார், தமிழக அரசு அமைச்சர்களை பகடைக்காயாக பயன்படுத்தி வருகின்றனர். மத்திய அரசுக்கு அடிபணிந்த அரசு தான் இது என்பதை நிரூபித்து வருகின்றனர்.மேலும் உரிமைக்காக போராடுபவர்களை அடக்கும் விதமாக வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் தமிழக அரசை வன்மையாக கண்டிக்கின்றேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: