ஈரோடு,
என் தாய் நாட்டிற்கு ஒரு கடிதம் என்ற தலைப்பில் உலக அளவிலான கடிதப் போட்டியை இந்திய அஞ்சல் துறை நடத்துகிறது. இது குறித்து, ஈரோடு கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் சுரேக் ரகுநாதன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறுகையில், கடந்த ஆண்டு, இந்திய அஞ்சல் துறையால் அகில இந்திய அளவில் நடத்தப்பட்ட மகாத்மா காந்திக்கு கடிதம் எழுதும் போட்டி மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து நடப்பாண்டில் உலக அளவிலான கடிதப் போட்டியை நடத்த இந்திய அஞ்சல் துறை தீர்மானித்துள்ளது. ரவீந்திரநாத் தாகூரின் ஆமார் தேஷேர் மாதி என்ற பெங்காளி மொழி தேசபக்திப் பாடலின் அடிப்படையில், என் தாய் நாட்டிற்கு ஒருகடிதம் என்ற தலைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கடிதம் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி இவற்றில் ஏதேனும் ஒரு மொழியில் எழுதப்பட வேண்டும். இன்லாண்டு லெட்டர் பிரிவு,என்வலப் பிரிவு என 18 வயது மற்றும் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு இருபிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட உள்ளது

கடிதத்தின் அளவு:
என்வலப் பிரிவில் எழுதுவோர், எ4 அளவு வெள்ளைத்தாளில், ஆயிரம் வார்த்தைகளுக்கு மிகாமல் எழுத வேண்டும். இன்லாண்டு லெட்டர் பிரிவில் எழுதுவோர், 500 வார்த்தைகளுக்கு மிகாமல் எழுத வேண்டும். கையால் எழுதப்பட்ட கடிதங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். அஞ்சலகங்களில் விற்கப்படும் கடித உறை, அல்லது வேறு உறைகள், தேவையான அளவு அஞ்சல் தலை ஒட்டப்பட்டவை, மற்றும் இன்லாண்டு லெட்டர் கார்டுகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். கூரியர் மூலம் அனுப்பப்படும் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. நேரில் கொண்டு வந்து கையில் கொடுக்கும் கடிதங்களும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

மாநில அளவில் தேர்வாகும் கடிதங்களுக்கு, ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசு ரூ.25 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.10 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.5 ஆயிரம் ரொக்கப்பரிசுகளும். அகில இந்திய அளவில் தேர்வாகும் கடிதங்களுக்கு ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசு ரூ.50 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.25 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும்.போட்டியில் பங்கு பெறுவோர், கடிதத்தின் மேல் 1.1.2018 அன்று வயது 18க்கு மேல் / 18க்கு கீழ் என சான்றளிக்கிறேன் என்ற வாசகத்தை எழுதிக் கையெழுத்திட வேண்டும். வெற்றி பெறும் போட்டியாளர்களின் வயதுச் சான்றிதழ் பரிசோதிக்கப்பட்ட பிறகே பரிசுக்குப் பரிந்துரைக்கப்படும்.இப்போட்டிக்கான கடிதங்களை அனுப்பக் கடைசி தேதி 30.9.2018 ஆகும். கடைசித் தேதிக்குப் பின் போஸ்ட் செய்யப்பட்ட தபால்கள் ஏற்கப்பட மாட்டாது. எனினும், தபாலில் 30.9. 2018 அல்லது அதற்கு முந்தைய தேதி முத்திரையுடன் கூடிய கடிதம் கட்டாயமாக அனுப்பப்பட வேண்டும். அனுப்பப்பட வேண்டிய முகவரி முதன்மை அஞ்சல் துறைத்தலைவர், தமிழ்நாடு வட்டம், சென்னை 600 002 என்கிற முகவரிக்கு அனுப்ப வேண்டும். உறையின் மேல், அஞ்சல் துறைக் கடிதப்போட்டி என்று தவறாமல் குறிப்பிட வேண்டும். இவ்வாறு அச்செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: