இராமநாதபுரம்;
இராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து 100 சதவீதம் இழப்பீடு வழங்கிடக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திங்களன்று 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பேரணியாக சென்று ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் 1 லட்சத்து 68 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தில் நெல், பருத்தி, மிளகாய் போன்றவை பயிரிடப்பட்டன. ஆனால், போதிய மழை பெய்யாததால் அனைத்தும் கருகி விட்டன. இதில் 2017-2018ஆம் ஆண்டுகளுக்கான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 3 லட்சத்து 3 ஆயிரம் விவசாயிகள் பயீர் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்திருந்தனர். ஆனால் வறட்சி பாதித்த நிலையில் அதற்கான நிவாரணம் வழங்கிட மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை

இதனைக் கண்டித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் இராமநாதபுரம் பாரதி நகர் பகுதியிலிருந்து சங்கத்தின் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் புறப்பட்டனர். நடைபயணமாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொருளாளர் கே.பி.பெருமாள், சிபிஎம் மாவட்டச் செயலாளர் வி.காசிநாததுரை, விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எம்.முத்துராமு, மாவட்டச் செயலாளர் வி.மயில்வாகனன், பொருளாளர் பி.கே.முருகேசன் மற்றும் நிர்வாகிகள் கல்யாணசுந்தரம், ராமமூர்த்தி, சேதுராமன், மகாலிங்கம், கருத்திருமன், நவநீதகிருஷ்ணன் மற்றும் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், இடைக்கமிட்டி செயலாளர்கள் கலந்தகொண்டனர்.

போராட்டத்தின் போது, தமிழக அரசும் காப்பீட்டு நிறுவனமும் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணத்தை வழங்காமல் இழுத்தடிப்பு செய்து வருவதை கண்டித்து முழக்கமிட்டனர். உடனே இழப்பீடு வழங்கா விட்டால் தொடர்ந்து போராட்டம் நடத்த உள்ளதாக எச்சரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து கோரிக்கை மனுவை ஆட்சியர் நடராஜனிடம் அளித்தனர். மாவட்ட ஆட்சியர் “பயிர் காப்பீடு இழப்பீடு விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; வறட்சி மாவட்ட அறிவிப்பு குறித்து அரசு மற்றும் உயர் வேளாண்துறை அதிகாரிகள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.