===நாகைமாலி===
விஸ்வநாத் பிரதாப் சிங் என்பது வி.பி.சிங் அவர்களின் முழுப் பெயர். 1921 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு ராஜ குடும்பத்தில் பிறந்தவர். மாண்டா சமஸ்தான மன்னராக இருந்த ராம் கோபால் சிங், வி.பி.சிங் அவர்களின் சித்தப்பா ஆவார். அவருக்கு குழந்தை இல்லை. எனவே, வி.பி.சிங்கை தத்தெடுத்துக் கொண்டார். சட்டம் பயின்ற வி.பி.சிங், காந்தியின் கொள்கையாலும் பின்னர் வினோபாவின் பூமிதான இயக்கத்தாலும் ஈர்க்கப்பட்டார். தனது சொத்தின் கணிசமான பகுதியை தானமாக வழங்கினார்.

இவரின் திறமையையும் நேர்மையையும் கண்ட லால் பகதூர் சாஸ்திரி இவரை அரசியலுக்குள் இழுத்தார். இந்திராகாந்தியின் மந்திரி சபையிலும், பின்னர் ராஜூவ் காந்தியின் மந்திரி சபையிலும் இடம்பெற்றிருந்த வி.பி.சிங், போபர்ஸ் ஆயுதபேர ஊழலில் ராஜூவ் காந்தியுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக பதவியை துறந்து விலகினார்.

ராஜூவ் காந்தி மீது பல குற்றச்சாட்டுகளை வி.பி.சிங் கூறினார். “நான் மந்திரியாக பதவியேற்றபோது, ராஜூவ் காந்தி மிகச் சிறந்த தலைவர் என்று கருதினேன். இந்திரா காந்தியை விட சிறப்பாக செயல்படுவார் என்று எண்ணினேன். ராஜூவ் காந்தி அப்படிப்பட்டவர் அல்ல என்பதை போகப் போக தெரிந்து கொண்டேன். சில தொழிலதிபர்களுக்கு சலுகைக் காட்டும்படி ராஜூவ் காந்தி என்னை நிர்ப்பந்தித்தார். ஒரு தொழிலதிபர் வீட்டில் நிதி இலாகா சோதனை நடத்தியபோது, அந்த தொழிலதிபருக்கு சாதகமாக என்னை நடந்து கொள்ளும்படி பிரதமர் ராஜூவ் காந்தியின் அலுவலக அதிகாரி என்னை நிர்ப்பந்தம் செய்தார்.”

இந்நிலையில், 1987 அக்டோபரில் காந்தி பிறந்த தினத்தில் ஜனமோர்ச்சா (மக்கள் முன்னணி) என்ற கட்சியை துவங்கினார். 1988, ஜூன் 18 ஆம் தேதி நடந்த இடைத்தேர்தலில் வி.பி.சிங் போட்டியிட்டார். வி.பி.சிங்கை தோற்கடித்து விட வேண்டும் என ராஜூவ் காந்தி எவ்வளவோ முயற்சி செய்தும் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வி.பி.சிங் வெற்றி பெற்றார். போபர்ஸ் ஆயுத ஊழல் நாடு முழுவதும் பெரும் பிரச்சனையாக உருவெடுத்தது. ஊழலுக்குப் பொறுப்பேற்று ராஜூவ் காந்தி பதவி விலக வேண்டுமென எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தனர். இதற்கு ராஜூவ் காந்தி மறுத்ததால், வி.பி.சிங், எதிர்க்கட்சிகள் 1989 ஆகஸ்ட் 30 அன்று பாரத் பந்த் நடத்தினார்கள்.

1989 நவம்பர் மாதம் நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில் ராஜூவ் காந்தி தலைமையிலுள்ள காங்கிரசை தோற்கடிக்க ஏழு எதிர்க்கட்சிகளுடன் வி.பி.சிங் ஆலோசனை நடத்தினார். 1977 இல் இந்திரா காந்திக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று கூடி இந்திரா காந்தியை தோற்கடித்து போல, எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்தால் ராஜீவ் காந்தியை தோற்கடிக்க முடியும் என வி.பி.சிங் கூறினார். திமு கழகம், தெலுங்கு தேசம் உள்ளிட்ட ஏழு எதிர்க்கட்சிகள் இணைந்து ‘தேசிய முன்னணி’ என்ற பெயரில் கூட்டணி அமைத்தன. இந்திய தேசிய காங்கிரசிற்கும் தேசிய முன்னணி கூட்டணிக்கும் பலத்தப் போட்டி நிலவியது. போபர்ஸ் ஆயுத ஊழல் தேர்தல் பிரச்சாரத்தின் மையப்புள்ளியாக இருந்தது. தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணப்பட்டன. இந்திய தேசிய காங்கிரசுக்கு 197 இடங்கனும் தேசிய முன்னணிக்கு 143 இடங்களும் கிடைத்தன. இந்திய தேசிய காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக வெற்றிப் பெற்றும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இந்த தேர்தலில் வழக்கத்திற்கு மாறாக இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு வடநாட்டில் பெரும் சரிவும், தென் மாநிலங்களில் மிகப்பெரும் வெற்றியும் கிடைத்திருந்தது. தமிழ்நாட்டில் இந்திய தேசிய காங்கிரசும், அஇஅதிமுகவும் கூட்டணி அமைந்திருந்தன. 39 நாடாளுமன்ற தொகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டணிக்கு தமிழ்நாட்டில் 38 இடங்களும், திமுக கூட்டணிக்கு ஒரே ஒரு இடமும் கிடைத்திருந்தது. திமுக கூட்டணியில் இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே நாகப்பட்டினம் தொகுதியில் வெற்றிப் பெற்றிருந்தது.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக வெற்றிப் பெற்றிருந்த போதிலும் போதுமான பலம் இல்லாததால் ஆட்சி அமைக்கப்போவதில்லை என்றும் எதிர்க்கட்சிகளின் வரிசையில் அமரப் போவதாகவும் ராஜீவ் காந்தி அறிவித்தார். தேசிய முன்னணிக்கு மெஜாரிட்டி பலம் கிடைக்கவில்லை என்றாலும், தேசிய முன்னணி மந்திரி சபை அமைந்தால் வெளியிலிருந்து ஆதரிப்பதாக பாரதிய ஜனதா கட்சியும் இடதுசாரிகளும் அறிவித்தனர். இதன் மூலம் தேசிய முன்னணிக்கு மெஜாரிட்டி கிடைத்தது. ஆட்சி அமைப்போம் என அறிவித்தனர்.
ஜனதா கட்சி தலைவரான சந்திரசேகருக்கு வி.பி.சிங்கை பிடிக்காது.

எனவே, பிரதமர் பதவிக்கு தான் போட்டிப் போடப்போவதாக சந்திரசேகர் அறிவித்தார். இது வி.பி.சிங்கை பிரதமராக்க வேண்டுமென எண்ணியிருந்த தேசிய முன்னணிக்கு அதிர்ச்சியை அளித்தது. சந்திரசேகரிடம் தேசிய முன்னணி தலைவர்கள் சமரசம் பேசியும் பலனில்லை. இந்நிலையில், புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க தேசிய முன்னணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வி.பி.சிங் எழுந்து பிரதமர் பதவிக்கு தேவிலால் பெயரை வழி மொழிகிறேன் என்றார். தேவிலால் ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டதாக கூட்டத்துக்கு தலைமை வகித்த மதுதாண்டவதே அறிவித்தார். இச்சந்தர்ப்பத்தில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது.

பிரதமராக முன்மொழியப்பட்ட தேவிலால் அமைதியாக எழுந்தார். “என்னை பிரதமராக தேர்வு செய்வதற்கு மிகவும் நன்றி. ஆனால், பிரதமர் பொறுப்பை நான் ஏற்கவில்லை. பிரதமர் பதவிக்கு மிகவும் பொருத்தமான வி.பி.சிங் பெயரை முன்மொழிகிறேன்” என்றார் தேவிலால். உடனே அஜித்சிங் எழுந்து “வி.பி.சிங் பெயரை நான் வழிமொழிகிறேன்” என்றார். வேறு எவர் பெயரும் முன்மொழியப்படாததால் வி.பி.சிங் ஒருமனதாக பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த சந்திரசேகர் கூட்டத்திலிருந்து வெளியேறினார். புதிய பிரதமராக வி.பி.சிங் பதவியேற்றார். துணை பிரதமராக தேவிலால் பதவியேற்றார். திமுக இந்த மந்திரி சபையில் இடம் பெற்றது. முரசொலிமாறன் மந்திரியானார்.

1990 ஆம் ஆண்டு வி.பி.சிங் ஆட்சிக்கு பெரும் நெருக்கடிகள் ஏற்பட்டன. முக்கியமான நெருக்கடி “மண்டல் கமிஷன்’ அமலாக்கம். மத்திய அரசு அலுவலகங்களிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் பிற்பட்டோருக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மண்டல் கமிஷன் சிபாரிசு செய்திருந்தது. இதை அமலாக்குவோம் என தேர்தல் சமயத்தில் வி.பி.சிங் வாக்குறுதி அளித்திருந்தார். மண்டல் கமிஷன் சிபாரிசை அமல்படுத்தப் போவதாக நாடாளுமன்றத்தில் அறிவித்தார். ஆகஸ்ட் 15 அன்று தில்லியில் செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து பேசும்போது மண்டல் கமிஷன் சிபாரிசை அமலாக்குவேன் என்று கூறினார்.

இந்நிலையில், மண்டல் கமிஷன் அமல்படுத்தக்கூடாது என வடமாநிலங்களில் கலவரங்கள் மூண்டன. தில்லி பல்கலைக்கழகத்தில் படித்து வந்த ராஜூவ்கோசாமி என்ற மாணவன் தீக்குளித்து உயிரிழந்தான். இதனால் கலவரம் பரவியது. உத்தரப்பிரதேசம், ஹரியானா, மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கலவரம் அதிகமாக இருந்தது. இது ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற முழக்கத்தோடு, பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அத்வானி ரதயாத்திரையை தொடங்கினார். குஜராத் மாநிலம் சோம்நாத் என்ற இடத்தில் தொடங்கிய ரதயாத்திரையை பத்தாயிரம் கிலோமீட்டர் பயணம் செய்து அயோத்தியில் முடிப்பது என அத்வானி திட்டமிட்டிருந்தார். அயோத்தி போய் சேர்ந்ததும் ராமர் பிறந்த இடத்தில் கோயில் கட்டும் பணி தொடங்கும் என அறிவித்திருந்தார்.

ஊர்வலம் செல்லும் இடங்களில் பாரதிய ஜனதா கட்சியினர் மத்தியில் வரவேற்பு இருந்தாலும் எதிர்ப்பும் ஆர்ப்பாட்டங்களும் கடுமையாக இருந்தன. இதன் காரணமாக சட்டம் – ஒழுங்கு சீர்குலையும் என்பதற்காக ரதயாத்திரையை கைவிடுமாறு பிரதமர் வி.பி.சிங் கேட்டுக் கொண்டார். ஆனால் அத்வானி மறுத்துவிட்டார். உடனடியாக அயோத்தியில் பிரச்சனைக்குரிய இடத்தை அரசே ஏற்க வகைசெய்யும் அவசர சட்டத்தை வி.பி.சிங் அரசு பிறப்பித்தது. பாஜகவும், விஸ்வ இந்து பரிஷத்தும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், அத்வானி ரதயாத்திரை பீகார் மாநிலத்திற்குள் நுழைந்தது. லல்லு பிரசாத் யாதவ் ரதயாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அத்வானியை கைது செய்தார். இதன் காரணமாக கலவரங்கள் மூண்டன.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்போவதாக விஸ்வ இந்து பரிஷத் அறிவித்தது. கரசேவகர்கள் மூன்றரை லட்சம் பேர் திரண்டனர். ராமஜென்மபூமி என்றழைக்கப்படும் பகுதிக்குள் செல்ல வேண்டுமானால் ‘சரயு’ ஆற்றுப்பாலத்தைக் கடந்து செல்ல வேண்டும். அந்தப் பாலத்தின் மீது போலீசாரும், ராணுவமும் அணிவகுத்திருந்தன. அதுமட்டுமல்ல கரசேவகர்களை தடியடி நடத்தி விரட்டியடித்தது. தடியடியில் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் பலியானார்கள். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இராணுவம், போலீஸ் காவலையும் மீறி சென்ற ஆயிரக்கணக்கான கரசேவகர்கள் பாபர் மசூதி மீது ஏறி நின்று, காவிக் கொடியை ஏற்றினார்கள். மசூதியின் மேல்பகுதியை இடித்து தள்ளினார்கள். வடமாநிலங்களில் நடந்த கலவரங்களில் 52 பேர் கொல்லப்பட்டனர். அயோத்தி பிரச்சனையில் வி.பி.சிங் அரசு பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவான நிலை எடுக்கவில்லை எனக்கூறி வி.பி.சிங் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறப் போவதாக அறிவித்தது. வி.பி.சிங் அரசை கவிழ்ப்பதற்கு தருணம் பார்த்துக் கொண்டிருந்த சந்திரசேகர் ஜனதா தளத்தை இரண்டாக உடைத்தார். இதன் விளைவாக நாடாளுமன்றத்தில் நம்பிக்கைக் கோரும் தீர்மானத்தை கொண்டுவர வி.பி.சிங் முடிவெடுத்தார். நாடாளுமன்றம் கூடியது. வி.பி.சிங் நம்பிக்கைக்கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார். வி.பி.சிங்கிற்கு போதுமான வாக்குகள் கிடைக்கவில்லை. இதனால் வி.பி.சிங் அமைச்சரவை கவிழ்ந்தது. “எந்தக் கொள்கைக்காக நாங்கள் பதவியை இழந்தோமோ அந்தக் கொள்கைகளுக்காக தொடர்ந்து போராடுவோம்” என்ற சபதத்தோடு வி.பி.சிங் பிரதமர் பதவியை தூக்கி எறிந்துவிட்டு வெளியேறினார்.

பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டுக்காகவும், இந்தியாவின் பன்முக கலாச்சாரத்தை கட்டிக்காக்கவும், மதவெறி சக்திகளோடு சமரசம் இல்லை என்பதற்காகவும் பிரதமர் பதவியை தூக்கி எறிந்தவர் வி.பி.சிங். காவிரியில் தமிழகத்தின் உரிமையை ‘நடுவர் மன்றம்’ அமைத்ததன் மூலம் நிலைநாட்டியவர் வி.பி.சிங். எல்லாவற்றிற்கும் மேலாக “இடதுசாரிகள் எனது இயற்கையான நண்பர்கள்” என இடதுசாரிகளை போற்றியவர் வி.பி.சிங் ஆம்! இப்படியும் ஒரு பிரதமர் இந்தியாவில் இருந்தார்.

Leave A Reply

%d bloggers like this: