கோவை,
கண் பார்வையற்றவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, தனிமனித பாதுகாப்பு உரிமைச்சட்டத்திற்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளிக்கவில்லை எனில் வழக்கு தொடரஇருப்பதாக தேசிய பார்வையற்றோர் இணையத்தின் பொதுச்செயலாளரும், உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான எஸ்.கேருங்கடா தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோவையில் ஞாயிறன்று நிருபர்களிடம் கூறுகையில், கண்பார்வையற்றவர்களுக்கான இடஒதுக்கீட்டை தமிழக அரசு இதுவரை செயல்படுத்தவில்லை. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இடஒதுக்கீட்டை ஆறுமாததிற்குள் செயல்படுத்த வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு, சமூக பாதுகாப்பு, உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் முறையாக அமல்படுத்தாமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இது குறித்த தெளிவான புள்ளி விபரங்கள் கூட தமிழக அரசிடம் இல்லை. உச்ச நீதிமன்றம் 2013 ஆம் ஆண்டு வழங்கிய ஆணையின்படி மத்திய, மாநில அரசுகள் பார்வையற்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தும், வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படாததால் மத்திய அரசின் மீது வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்காத தமிழக அரசு மீதும் வழக்கு தொடர தயாராக இருக்கிறோம்.

மேலும், வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்கும் கண்பார்வையற்றவர்களுக்கு உணவு பாதுகாப்பு, பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு, உள்ளிட்ட வசதிகளையும் தமிழக அரசு கட்டாயம் செய்து தர வேண்டும். கண்பார்வையற்றவர்கள் படிக்கும் வகையில் அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் பிரெய்லி புத்தகத்தை ஒரு மாதத்திற்குள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு பார்வையற்றவர்களுக்கான உரிமைகளை வழங்க மறுத்தால் அரசின் மீது வழக்கு தொடர வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஏற்கனவே பார்வையற்றவர்களுக்கு சலுகைகள் வழங்காத ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கர் அரசு மீது அந்தந்த உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வாறு எஸ்.கே ருங்கடா கூறினார். இந்த பேட்டியின்போது தேசிய பார்வையற்றோர் இனையத்தின் அகில இந்திய துணைத்தலைவர் காசிமணி மற்றும் ஒருங்கிணைப்பாளர் சதாசிவம் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave A Reply

%d bloggers like this: