மன்னார்குடி :

குடவாசலில் இருந்து  கொரடாச்சேரி   லட்சுமாங்குடி கூத்தாநல்லூர் வழியாக மாவூர் கேட் வரை  சுமார் 35 கி.மீ. நீள சாலை திருவாரூர் மாவட்டத்தின் மாவட்ட முக்கிய சாலைகளில் ( எம்டிஆர் சாலை ) ஒன்றாகும். இந்த 35 கி.மீ சாலையின் மிக முக்கியமான பகுதி லட்சுமாங்குடியிலிருந்து மாவூர் கேட்வரை 13 கி.மீ. தூர சாலையாகும். பல்லாயிரக்கணக்கான  சிறு, குறு மற்றும் சில்லறை வியாபாரிகள் சைக்கிள்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் சென்று தொழில்கள் செய்து பிழைப்பு நடத்தும்   வாழ்வாதாரமாக இந்த சாலை  உள்ளது.

விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், உயர்நிலை பள்ளி, மேனிலை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், சில்லறை வியாபாரிகள், முறைசாரா சாரா தொழிலாளர்கள் மற்றும் பொது மக்கள் என சுமார் இருபதாயிரத்திற்கும்   மேற்பட்டோர் அன்றாடம் இந்த சாலையைத்தான் பிரதானமாக பயன்படுத்துகிறார்கள். நெல், கரும்பு, வாழை, பருத்தி, தென்னை மற்றும் மீன் போன்ற வேளாண் உற்பத்தி பொருள்களின் விற்பனை சந்தை மையங்களை இணைக்கும் சாலையாக இச்சாலை விளங்கி வருகிறது..

இச்சாலையானது ஏராளமான அபாயகரமான வளைவுகளுடனும் சாலை மட்டத்திலிருந்து சராசரியாக சுமார் 30 அடி ஆழத்தில் உள்ள வெண்ணாற்றங்கரையோரமாகவும் செல்கிறது. இச்சாலையை  நெடுஞ்சாலைத்துறை பேட்ச் வேலை செய்திருந்தாலும்  தார் சாலையின் பரப்பு ஏற்ற இறக்கமாகவும் பல இடங்களில்  குண்டுங்குழியுமாக  காட்சியளிக்கிறது. இதன்வழியாகவே அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அக்டோபரிலிருந்து டிசம்பர்வரை மழைக்காலங்களில் குறிப்பாக மாலை 6 மணிக்கு பிறகு பேருந்துகளை ஓட்டுவது எவ்வளவுதான் அனுபவசாலியாக இருந்தாலும் சிரமம்தான் என இந்தப் பேருந்துகளின்  ஓட்டுனர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக கூறுகின்றனர்.

 

 

 

இப்படிப்பட்ட பிரதான போக்குவரத்தைக் கொண்ட இச்சாலை, மாவட்ட முக்கிய சாலைக்குரிய அகலத்துடன் பக்கவாட்டில் ஏற்றயிறக்கம் இல்லாத சமமட்டச் சாலையாக தரமாக போடப்படவேண்டும் என்பதுதான் வாகன ஓட்டிகள் உள்பட மக்கள் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. மக்களின் இக்கோரிக்கையைப் பற்றி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் வி.எஸ். கலியபெருமாள் கூறும்போது, கூத்தாநல்லூரில்தான் பொதுத்துறை வங்கிகள் செயல்படுகின்றன. கூத்தாநல்லூரில்தான் அரசு தாலுகா மருத்துவமனையும் உள்ளது.

மாவூர் கேட்டிலிருந்து சித்திரையூர், பாலக்குறிச்சி, மணக்கரை புள்ளமங்கலம், அரிச்சந்திரபுரம், வடபாதிமங்கலம், கொட்டூர், பழையனுர், தண்ணீர்குன்னம், மஞ்சனவாடி, கொத்தங்குடி, வடகோவனூர் தென்கொவனூர் என முக்கிய ஊராட்சிகள் மற்றும் உள்கிராமங்களிலிருந்து  ஆயிரக்கணக்கான மக்கள் வருவாய் வட்டதலைநகரான கூத்தாநல்லூருக்கு அன்றாடம் வந்து செல்கின்றனர். மேலும், கூத்தாநல்லூருக்கும் கிழக்கே சித்திரையூர் மற்றும் மாவூர் கேட் வரையுள்ள கிராமங்களிலிருந்துதான்  விவசாயிகள் , ஏழை எளிய விவசாயத் தொழிலாளர்கள் மிக அதிகமாக கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனைக்கு  வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்று வருகின்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.  எனவே இச்சாலையை புதுப்பித்து புதிதாக போடுவதற்கு நெடுஞ்சாலைத்துறை விரைவாக நடவடிக்கை  எடுக்க வேண்டும் என அவர் கூறினார்.

இம்முக்கிய மாவட்ட சாலை மன்னார்குடி நெடுஞ்சாலைத்துறை உட்கோட்ட பொறியாளரின் பராமரிப்பு வரம்பெல்லையில் உள்ளது. கடந்த ஆண்டு வருவாய் வட்டமாக அறிவிக்கப்பட்ட  கூத்தாநல்லூர்  மிக மிக வேகமாக வளர்ந்து வருகிற  நகரமாதலால்  2018—2019 நிதியாண்டிற்குள் இச்சாலை அமைக்கப்படுவதற்கு நெடுஞ்சாலைத்துறை  உட்கோட்ட பொறியாளர்  விரைவாக  நடவடிக்கைகளை துவங்க வேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள்.

Leave A Reply

%d bloggers like this: