புதுச்சேரி,
கருத்துரிமையைப் பாதுகாக்க நாம் போராடாவிட்டால் எழுத்துலகத்தை எழுந்திருக்க இயலாமல் செய்துவிடுவார்கள் என்று பேராசிரியர் அருணன் கூறினார்.

புதுச்சேரியில் ஞாயிறன்று நிறைவடைந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநாட்டில் நிறைவுரையாற்றிய அவர் மேலும் பேசியதாவது: கடந்த 13 மாநாடுகளைவிட இம்மாநாடு மகிழ்ச்சியளிக்கிறது. ஏனென்றால் பலதுறை சார்ந்த பெரிய அறிஞர்களை இம்மேடையை நோக்கி அழைத்து வந்து சிவப்பு, நீலம், கருப்பைப் பற்றி பேச வைத்துள்ளது. ஸ்தாபக தலைவர் கே.முத்தையா இதைத்தான் கனவு கண்டார். மாற்றுக்கருத்து உடையவர்களிடம்கூட நாம் எதிர்பார்க்கும் ஒரு சிறு சிந்தனை இருந்தால் கூட அந்தப்புள்ளியில் நாம் இணைய வேண்டும். நம் அமைப்பின் எதிர்காலத்தைப் பாதுகாக்க இளைஞர்படை உள்ளது. கலை, இலக்கியம் யாவும் கடவுளுக்கு என்றும் மன்னனுக்கு என்றும் கலைக்கே என்றும் தற்போது கார்ப்பரேட்டுகளுக்கே என்றும் கடந்து வந்துள்ளது. ஆனால் நாம், கலை மக்களுக்கே என நடந்து வருகிறோம். ஆட்கொல்லி ஸ்டெர்லைட்டைப் பாதுகாக்க பாஜகவுக்கு மட்டும் துணிச்சல் எப்படி வருகிறது? கார்ப்பரேட், மதவெறியர் கூட்டுதான் அந்தத் துணிச்சலைத் தருகிறது. இதே உண்மைதான் 8 வழிச் சாலைக்கும். அது ஜிண்டாலுக்கே தவிர உழைப்பாளி மக்களுக்கல்ல.

கருத்துரிமையைப் பாதுகாக்காவிடில் எழுத்துலகம் எழுந்திருக்க இயலாது. நாக்பூரிலிருந்து லண்டன் அனில் அகர்வால், அம்பானி வரை இந்தக்கள்ளக் கூட்டணியை எதிர்க்கவேண்டும். இதற்குக் காந்தியவாதிகளையும் நாம் இணைத்து முற்போக்கு என்ற புள்ளியிலிருந்து விரிவான ஒற்றுமையை தமுஎகச கட்ட வேண்டும். சாதியற்ற தமிழர், காவியற்ற தமிழகத்தை அடைய இந்த ஒற்றுமை தேவை.  கலை இலக்கிய அமைப்பு என்றவகையில் ஆவேசமிக்க கோபத்தைப் படைப்புகள் மூலம் நாம் வெளிப் படுத்த வேண்டும்.தான் இறக்கப்போவது தெரியாமலேயே அக்காவுக்கு ஆறுதல் சொன்ன தூத்துக்குடி ஸ்னோலினின் அந்த ஒற்றைவரியே இலக்கியம் படைக்கப் போதும். 8 வழிச்சாலைக்கு என் நிலத்தைத் தரமாட்டேன் என வெகுண்டெழுந்த மூதாட்டியை எழுதாமல் யாரைப்பற்றி எழுதப் போகிறோம்?  கவுசல்யாவை விட்டு விட்டு வேறு எந்தக் கதாநாயகியை இலக்கியவாதி தேடுகிறான்? இந்நேரத்தில் காரல்மார்க்சின் 200 ஆவது பிறந்த ஆண்டை நாம் நினைவிற்கொள்ள வேண்டும். அவர் ஒரு அழகியல்வாதி என்பதற்காக.கலை இலக்கியம் சமூக விளைச்சல் என்பார் மார்க்ஸ். எனவே உழைப்பாளிமக்களை மகிழ்விப்பதற்கான இலக்கியத்தைப் படைப்போம். அதே நேரத்தில் எதிரிகளை மிரள வைக்கவும் எழுத வேண்டும். விரிந்த அணிவகுப்போடு களத்தில் இறங்குவோம். விரிந்த படைப்புகளோடு எழுத்துலகில் இறங்குவோம். இவ்வாறு அருணன் கூறினார்.

புதிய நிர்வாகிகள் தேர்வு:
மாநாட்டில் தமிழகம், புதுச்சேரியில் இருந்து 540 பிரதிநிதிகள் பங்கேற்றனர். 137 பேர் கொண்ட புதிய மாநிலக்குழு தேர்வு செய்யப்பட்டது. சங்கத்தின் கவுரவத் தலைவராகச.தமிழ்ச்செல்வன், தலைவராகசு.வெங்கடேசன், பொதுச்செயலாளராக ஆதவன் தீட்சண்யா,பொருளாளராக சு.ராமச்சந்திரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.