பள்ளிப்பாளையம்,
பள்ளிப்பாளையம் பகுதிக்குட்பட்ட வ.உ.சி நகரப் பகுதியில் மின்வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லாத அங்கன் வாடியில் பிள்ளைகளை சேர்க்க பொது மக்கள் அச்சப்படுகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் பகுதிக்குட்பட்ட வ.உ.சிநகரப் பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு அரசு தொடக்கப்பள்ளியின் அருகே அரசு அங்கன்வாடி பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 50 க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். ஆனால் அங்கன்வாடி பள்ளி திறக்கப்பட்டு 10 வருடங்கள் கடந்த பின்பும் அங்கன்வாடி பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் இதுவரை செய்து தரப்படவில்லை. கழிப்பிடம் உண்டு தண்ணீர் வசதி இல்லை. மின்சார வசதி செய்து தரப்படவில்லை. மேலும், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், பாடபுத்தகங்கள் தரப்படுவதில்லை. எவ்வித வசதியும் செய்து தரப்படாமல் கணக்குக்காகவும், கடமைக்காகவும் அங்கன்வாடி செயல்படுவதாக இப்பகுதி பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். மேலும் எவ்வித அடிப்படை வசதியோ, பாதுகாப்பு ஏற்பாடுகளோ இல்லாத அங்கன்வாடியில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் தயங்குகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த வாலிபர் சங்க நிர்வாகி முருகேசன் கூறுகையில், இந்த அங்கன்வாடிக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பலமுறை தொடர்ந்து அரசு நிர்வாகத்திடம் முறையிட்டு வந்துள்ளோம். ஆனால் தொடர்ந்து அலட்சியப்படுத்தியே வருகின்றனர். இனி அடுத்தகட்டமாக மக்களை திரட்டி போராட்டம் நடத்த உள்ளதாகவும், இதற்கான தயாரிப்பு பணிகள் தற்போது வாலிபர் சங்கத்தால் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.