கடந்த மூன்றாண்டுகளில் உலகம் மத அடிப்படையிலான வேற்றுமைகளாலும், நாடுகளுக்குள் மதவெறி, சாதிவெறி, இனவெறி, பிராந்தியவெறி, மொழி வெறி போன்ற பல்வேறு வெறித்தனங்கள் கிளப்பிவிடப்படுவதாலும் இவற்றின் காரணமாக புலம்பெயர்ந்து வந்து இதர நாடுகளில் குடியேறியுள்ளவர்கள் மத்தியில் ஒருவிதமான அச்ச உணர்வு ஏற்பட்டிருப்பதாகவும் ‘வெஸ்டர்ன் யூனியன்’ அமைப்பு, உலக இளைஞர்கள் இடையே மேற்கொண்ட ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.

உலக அளவில் பணம் பரிவர்த்தனை செய்திடும் நிறுவனமான வெஸ்டர்ன் யூனியன் நிறுவனம், உலகில் 15 நாடுகளில் 20-36 வயதுக்கிடையிலான 844 இந்திய இளைஞர்கள் உட்பட உலக அளவில் பத்தாயிரம் இளைஞர்களிடையே ஆய்வு ஒன்றினை மேற்கொண்டது. 2015ஆம் ஆண்டில் இருந்ததைக் காட்டிலும் இப்போது உலகம் மிக மோசமான முறையில் பிளவுண்டிருக்கிறது என்று இந்திய இளைஞர்களில் 69 சதவீதத்தினர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். மேலும் இவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், வரும் 2030ஆம் ஆண்டுவாக்கில் இது மேலும் மோசமான முறையில் பிளவுபடும் என்றும் கூறியிருக்கிறார்கள்.

1980க்கும் 1990க்கும் இடையே பிறந்த இளைஞர்கள் நாம் உலகக் குடிமகன் என்ற அந்தஸ்தைப் பெறுவதற்கும், நாடுகளின் எல்லைகளைக் கடந்த சமூகங்களை உருவாக்குவதற்கும் மத அடிப்படையிலான வேற்றுமைகளும், நாடுகளுக்குள் கிளப்பிவிடப்படும் மதவெறி, சாதிவெறி, இனவெறி, பிராந்திய வெறி, மொழி வெறி போன்ற பல்வேறு வெறித்தனங்களும் மிகப்பெரும் அச்சுறுத்தல்களாக விளங்குவதாகவும், புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்கிறவர்கள் எப்போதும் அச்சத்துடனேயே வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது, இதை மிகப் பெரும் ஆபத்தாக இளைஞர்கள் உணர்ந்திருக்கிறார்கள். ‘ஒருவர் உலகக் குடிமகனாக உயர்ந்திடவும், சமூகத்தில் நிலவும் பாகுபாடுகளை ஒழித்திடவும் வேண்டுமாயின், ஒவ்வொரு சமூகத்தினரிடமும் இருக்கின்ற வேற்றுமைகளை மதிப்பதற்கு அதிக அளவில் முன்னுரிமை அளித்திட வேண்டும்.

இத்துடன் புதிய கலாச்சாரப் பண்புகளைத் தழுவக்கூடிய திறமைகளைப் பெறவேண்டும். அப்போதுதான் மக்கள் மத்தியில் காணப்படும் பல்வேறு கலாச்சாரப் பண்புகளையும் மதித்திடவும், சமூகத்தில் பொறுப்புள்ள குடிமகனாக இயங்கிடவும் முடியும்’ .‘அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றம் ஏற்பட்டுள்ள இன்றைய காலகட்டத்தில் ஒருவர் ஒருநாட்டில் வாழ்ந்து கொண்டு, இன்னொரு நாட்டிற்காக வேலை செய்வது என்பது மிகவும் எளிதாகும். இதற்கு அவர்களுக்குத் தேவை, பாலின சமத்துவத்துடன், மதம், கலாச்சாரம் அல்லது தேசிய இனம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த தடையரண்கள் எதுவும் இல்லாமல் இருந்திட வேண்டும் என்றே பெரும்பான்மையான இந்திய இளைஞர்கள் கூறியிருக்கிறார்கள். பல்வேறு வகையிலான வெறித்தனங்கள் தூண்டிவிடப்படும் போதிலும், அவற்றுக்கு ஆளாகாமல் நம்பிக்கையளிக்கிறது இளையதலைமுறை.

Leave A Reply