கோவை,
வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கூலி உயர்வு தொடர்பாக, அந்தத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு சட்டசபையில் குரல் கொடுக்க வேண்டும் என்று சிஐடியு சார்பில் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சிஐடியு வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் பரமசிவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டம், வால்பாறையில் சுமார் 70 தேயிலை நிறுவனங்கள் உள்ளன. இதில், சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடும் குளிர், வன விலங்குகள் நடமாட்டம் இப்படிபல்வேறு பிரச்னைகளுக்கு நடுவே வேலை செய்தும், அதற்கான கூலியை பெற முடியாமல் வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கடும் அவதி்பட்டு வருகின்றனர். கடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது, நான் வெற்றி பெற்றால், தேயிலை தோட்ட தொழிலாளர்களின் கூலியை ரூ.350 ஆக உயர்த்த முயற்சி செய்வேன் என அதிமுகவின் சார்பில் போட்டியிட்ட போது கஸ்தூரி வாசு கூறியிருந்தார். இவர் சட்டமன்ற உறுப்பினராகி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் கூலி உயர்வு தொடர்பான முத்தரப்பு பேச்சுவார்த்தை கை கொடுக்கவில்லை.

தற்போது ரூ.290 கூலியை மட்டுமே இத்தொழிலாளர்கள் பெற்றுவருகின்றனர். சில தொழிற்சங்கங்கள் நியாயமற்ற கூலி ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுள்ளனர். கூலி உயர்வு தொடர்பான போராட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது கூலியை ரூ.350 ஆக உயர்த்தாவிட்டால் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கஸ்தூரிவாசு கூறினார். ஆனால் இதுநாள் வரையில் கூலி உயர்வு வழங்கப்படவில்லை. கேரளாவில் வழங்கப்படுவதை போலவே வால்பாறை தொழிலாளர்களுக்கும் கூலியை உயர்த்தி வழங்க வேண்டும். அதேபோல், வால்பாறையை சுற்றுலா தளமாக அறிவித்து, அவற்றை மேம்படுத்துவதாக சொன்ன வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. எனவே, சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரிவாசு இதுதொடர்பாக சட்ட மன்றத்தில் குரல் கொடுத்து வால்பாறை தோட்ட தொழிலாளர்களின் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.