புதுச்சேரி,
“காவி மதவெறியர்களால் அம்பேத்கர், பெரியார், லெனின் சிலைகள் உடைக்கப்பட்டதற்கு எதிராக ஓராயிரம் சிலைகள் வடிப்போம்” என்ற நிகழ்ச்சி தமுஎகச 14ஆவது மாநில மாநாட்டில் நடைபெற்றது. சனிக்கிழமையன்று (ஜூன் 23) பொன்மாலைப்பொழுதில் மாநாட்டு அரங்க வளாகத்தில் ஆதவன் தீட்சண்யா தலைமையில் நடைபெற்ற “சிலைகளுக்கு மரணமில்லை, சிந்தனைகளுக்கு வீழ்ச்சியில்லை” நிகழ்ச்சியில் இயக்கக் கலைஞர்களின் பாடல், ஸ்னோலின் நூல்வெளியீடு, “எங்கள் கனவு’’ என்ற திரைத் தொகுப்பு குறுந்தகடு வெளியீடு, கவிதைவாசிப்பு நிகழ்வுகளுக்கு இடையே சிற்பி ஜெயராமன் தலைமையிலான குழுவினர் அம்பேத்கர், பெரியார், லெனின் சிலைகளை வடித்தனர். ஓவியர் சிறீராசா உடனிருந்தார்.

அதனையடுத்து 170ஆவணப்படங்கள் அடங்கிய டிவிடி மற்றும் தமுஎகசவின் யூடியூப் பாடல்கள்அடங்கிய குறுந்தகட்டினை திரைப்பட இயக்குநர் கோபி நயினார் வெளியிட்டு பேசினார். பின்பு இளம் இயக்குநர்கள் பாராட்டப்பட்டனர். யவனிகா சிறீராம்,வெயில், மனுஷி,நவகவி, ஜீவி, கலைஇலக்கியா, உமாமகேஸ்வரி, ஏகாதசி, லட்சுமிகாந்தன், வெண்புறா, நா.வே.அருள், மு.ஆனந்தன், வல்லம் தாஜ்பால், தனிக்கொடி, ஸ்டாலின்சரவணன், இனியன், க.சண்முகசுந்தரம், தி.கோவிந்தராசு ஆகிய தமிழக, புதுச்சேரி கவிஞர்கள் கவிதைகள் வாசித்தனர். இந்நிகழ்ச்சிகளைத் எஸ்.கருணா, க.பிரகதீஸ்வரன் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

மனுவை எரிக்கும் அம்பேத்கர் சிலையை அமைப்போம்
ஆதவன் தீட்சண்யா பேசுகையில், மதவெறியர்கள் அம்பேத்கர், லெனின், பெரியார் சிலைகளை மாற்றுத்தத்துவமாக பார்த்து அஞ்சி சகிப்பின்மையால் அவற்றை இடிக்கிறார்கள். அம்பேத்கர் அரசியல் சட்ட புத்தகத்தைகையில் வைத்திருப்பது போலவே சிலைகள் இருப்பதில் நுட்பமான முதலாளித்துவ அரசியல் உள்ளது. ஒடுக்கப்பட்டோர் தமக்கு எதிராக போராடினால் ‘ “அரசியல் சட்டத்தை டாக்டர் அம்பேத்கர்தான் எழுதினார். எனவே அவற்றின் மூலம் நாம் தீர்வு காணலாம்’’’ என நம்மை அமைதிப்படுத்த அந்த சிலைகளை பயன்படுத்துகிறார்கள். இந்து வகுப்புவாதிகளோ ‘பெரியார் காலம் முழுவதும் இந்துமதகுறைகளை போக்கத்தான் விமர்சித்தார். அதனால் அவரை இன்னொரு நாயன்மாராக நாம் ஏற்றுக் கொள்ளலாம்’ எனவும், அவர்கள் போற்றும் தலைவர்கள் வரிசையில் தற்போது அம்பேத்கரையும் வைத்து திசை திருப்புகின்றனர். எனவே பீப்பிள் டெமாக்ரசியில் பி.வி.ராகவலு எழுதியுள்ளதை உள்வாங்கி மனுஸ்மிருதியை எரிக்கும் அம்பேத்கர் சிலையை வடிவமைப்போம்.

Leave a Reply

You must be logged in to post a comment.