குவாலியர்:
6 வயது குழந்தையை, ஐஸ்கிரீம் வாங்கித் தருவதாக ஆசைவார்த்தை கூறி அழைத்துச் சென்று, பாலியல் வன்கொலைக்கு உள்ளாக்கிய சம்பவத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியர் மாவட்டம் மொரினா பகுதியைச் சேர்ந்த தம்பதி, குவாலியர் நகரில் நடக்கும் உறவினர் இல்ல திருமணத்திற்கு சென்றிருந்தனர். அவர்கள் தங்களின் 6 வயது மகளையும் உடன் அழைத்து சென்று உள்ளனர். திருமண விழா பரபரப்பில் குழந்தையை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். ஒரு கட்டத்தில் தங்களின் குழந்தையை காணவில்லை என்பதை அறிந்து பதறியுள்ளனர். உடனடியாக காவல்துறைக்கும் தெரிவித்துள்ளனர்.அவர்கள் சிசிடிவி-யை ஆராய்ந்து பார்த்தபோது, அதில் குழந்தையை ஒருவர் ஏமாற்றி அழைத்துச் சென்றது தெரியவந்தது. அந்த சிசிடிவி காட்சிப்படி, திருமண கொண்டாட்டங்களுக்கு நடுவே இரவு 11.30 மணிக்கு சம்பந்தப்பட்ட குழந்தை ஒரு நபருடன் வெளியே வருகிறது. யாரோ ஒரு நபருடன் வேகவேகமாக அந்த குழந்தை யாருமற்ற தெருவில் நடக்கிறது. சிறிது நேர நடைக்கு பிறகு திடீரென குழந்தை, அந்த நபரிடமிருந்து தப்பி திரும்பி வந்த வழியே ஓடி வருகிறது.

ஆனால் அந்த நபர், குழந்தையை மீண்டும் அழைக்கிறார். எதனாலோ பயப்படும் 6 வயது குழந்தை அவர் பின்னாலேயே செல்கிறது. பின்னர், அதிகாலை 2.30 மணியளவில் குற்றவாளி மட்டும் தனியே திரும்பி வருவது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தன.இதையடுத்து அடுத்தநாள் காலை, போலீசார் நடத்திய தேடுதல் பணிக்குப் பின், திருமணம் நடந்த இடத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள வனப்பகுதியில் சடலமாக முகம் சிதைந்த நிலையில் குழந்தை கிடந்துள்ளது. குழந்தையை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி மிகக் கொடூரமான முறையில் கொலை செய்திருப்பதும் தெரிய வந்தது.

தற்போது, சிசிடிவி காட்சிகள் மூலம், திருமண நிகழ்வில் சமைக்க வந்திருந்தவர்களில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த குற்றத்தை செய்யும்போது எந்த பதட்டமும் இல்லாமல் நிதானமாக அந்த நபர் காணப்படுவதால், வேறு சிலரும் இந்த வன்கொலையில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.