சென்னை:
மு.க. ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கும், திமுகவினர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
             இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெள்ளியன்று நாமக்கல் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டபோது, அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, சிபிஎம் உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் முடிந்து கலைந்து செல்கின்ற போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் 192 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த கைது நடவடிக்கையை கண்டித்து சென்னை ஆளுநர் மாளிகை முன்பு சனியன்று (ஜுன் 23) திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடத்திய திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையின் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

மத்திய அரசுக்கு அடிபணிந்து, கைப்பாவையாக அதிமுக அரசு செயல்படுவதால், மாநில அரசின் அதிகாரத்தில் அத்துமீறி ஆய்வு என்ற பெயரில் ஆளுநர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இதுபற்றி கேட்கவோ, கண்டிக்கவோ திராணியற்ற அரசாக அதிமுக அரசு உள்ளது. மாறாக மாநில சுயாட்சிக்கு விரோதமாக செயல்படும் ஆளுநரின் இத்தகைய நடவடிக்கையை கண்டித்து போராட்டம் நடத்தும் எதிர்கட்சிகள் மீது தமிழக அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது வன்மையான கண்டனத்திற்குரியது.எனவே கைது செய்யப்பட்ட திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனவும், நாமக்கல்லில் போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுகவினர் அனைவரையும் எந்தவித நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

சமீப காலமாக தமிழக அரசு போராட்டம் நடத்துபவர்களை சிறையில் அடைப்பது, வழக்குகள் தொடுப்பது, காவல்துறையை ஏவி விட்டு காட்டுமிராண்டித்தனமாக தாக்குவது உள்ளிட்ட ஜனநாயக நெறிமுறைகளுக்கு விரோதமாகவும், கருத்துரிமை, பேச்சுரிமைக்கு எதிராகவும், ஊடகவியலாளர், பத்திரிகையாளர், தொலைக்காட்சி நிறுவனங்கள் என அனைத்து தரப்பினருக்கும் எதிராகவும் கடுமையான அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது ஜனநாயகத்தின் குரல்வளையையே நெரிக்கும் செயலாகும். தமிழக அரசின் இத்தகைய ஜனநாயக விரோதப் போக்கினை எதிர்த்து அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து வலுவாக கண்டன குரலெழுப்ப வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.