எழுத்தாளர் பெருமாள் முருகனின் வார்த்தைகள் நேர்மையும், சத்தியமும், கொண்டவைகளாக இருந்தன.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 14 வது மாநாட்டையொட்டி நடந்த ’கருத்துரிமை கருத்தரங்கத்தில்’ எழுத்தாளர் பெருமாள் முருகன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை பொதுமைப்படுத்தி, அதிலிருந்து எல்லோருக்குமான செய்தியை அழுத்தமாக வெளிப்படுத்தினார்.

‘மாதொரு பாகன்’ நாவலையொட்டி எழுந்த சர்ச்சைகள், எதிர்ப்புகள் அதைத் தொடர்ந்து ‘எனக்குள் இருந்த எழுத்தாளன் செத்துவிட்டான்’ என எழுத்துலகிலிருந்து விலகிய பெருமாள் முருகன் கடந்த இரண்டு வருடங்களில் அதிலிருந்து தெளிவும் உறுதியும் பெற்றவராக மீண்டிருந்தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் தலைவரான எழுத்தாளர் Tamil Selvan , தனக்காக வழக்குத் தொடுத்து பெற்ற வெற்றி, எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கானது மட்டுமல்ல, அனைத்து எழுத்தாளர்களுக்குமானது என்றார்.

மத அடிப்படைவாதமும், ஜாதியப் படி நிலைகளாலான சமூகமும் படைப்பாளிகளை சுதந்திரமாக தன் கருத்துக்களை எழுத அனுமதிப்பதில்லை, அவைகளுக்கு எதிரான யுத்தத்தில் மார்க்சீயவாதிகளும், அம்பேத்காரியவாதிகளும், பெரியாரியவாதிகளும் ஒன்று பட்டு நிற்க வேண்டும் என்பதை மையப்படுத்திய அவரது உரை, அமைதியாகவும், அழுத்தமாகவும் இருந்தது.

தனிமைப்பட்ட, தவித்துக் கிடந்த அந்த எழுத்தாளர், தன்னோடு இந்தக் காலங்களில் தோளில் கை போட்டு, தன் இதயத்தின் மிக அருகில் நின்று பேசிய எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் பற்றி சொல்லிய விஷயங்களில் அரங்கில் நிறைந்திருந்தவர்களுக்கு முக்கிய செய்திகள் இருந்தன.

தமிழ்ச்செல்வனை ஏற்கனவே ரொம்பப் பிடிக்கும். இன்று ரொம்ப ரொம்ப பிடிக்கிறது.

Mathavaraj

Leave a Reply

You must be logged in to post a comment.