ஒருவர் தனது கருத்துக்களை எங்கவேணுமானாலும் பேசுவது, எழுதுவது அவரவர் உரிமை. அத்தகைய உரிமையை நமது அரசியல் அமைப்புச் சட்டம் வகுத்து தந்துள்ளது. சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் மக்களின் குறைகளை நாங்கள் எடுத்துரைப்போம். அதே போல் எழுத்தாளர்கள் தங்களது பத்திரிகை வாயிலாகவும் நிறை, குறைகளை வெளிப்படுத்துவதும் வழக்கம். ஆனால் இன்றைக்கு அத்தகைய பேச்சு உரிமை, எழுத்துரிமைக்கு இந்தியாவில் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத் போன்ற மாநிலங்களில் இந்து மதத்தின்பெயரால் மற்ற மதத்தினரின் வழிபாட்டுத் தளங்களை அடித்து நொறுக்கி அவர்களை வழிபடவிடாமல் தடுக்கும் நிகழ்வு நடைபெற்றுவந்தது. தற்போது அந்த நிலை தென் இந்தியாவில் அரங்கேற்றும் வேலையை சங்பரிவாரக் கும்பல் செய்து வருகிறது.

படைப்பாளிகளின் படைப்புகளை தடைசெய்யவும், அவர்கள் மீது தாக்குதலை நடத்தவும் அந்த கும்பல் துவங்கியுள்ளது. இதனால் ஜனநாயகத்திற்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது. மத்தியப்பிரதேசத்தில் அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே இதனை எதிர்த்து அனைத்து தரப்பட்ட மக்களும் ஒன்றுபட்டு முறியடிக்கவேண்டும். அதற்கு நான் சார்ந்துள்ள அமைப்பும் கட்சியும் உறுதுணையாக இருக்கும்.

Leave a Reply

You must be logged in to post a comment.