===கே.பி.பெருமாள்====
ஒரு குடியிருப்பு இருக்ககூடிய இடத்திற்கு முதல் தேவை அங்கு சென்று வருவதற்கான பாதை. ஒரு நகரம், ஒரு கிராமம் என்றால் அங்கு சென்று வருவதற்கு சாலை மிகவும் அவசியம். இந்தியா பரந்து விரிந்த நாடு. இங்கு பல லட்சக்கணக்கான கிராமங்கள் மற்றும் சிறு மற்றும் பெரு நகரங்கள் உள்ளன. இவைகளை இணைப்பவை சாலைகள். இன்னும் பல கிராமங்களுக்கு சாலை வசதி முழுமையாக கிடைக்கவில்லை.

சாலைகள் :
தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட முதன்மை சாலைகள், மாவட்ட இதர சாலைகள் மற்றும் கரும்பு அபிவிருத்தி திட்ட சாலைகள், உள்ளாட்சிச் சாலைகள் (கிராமச் சாலைகள்) மற்றும் இதர சாலைகள் என சாலைகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் 1,52,183 கிலோ மீட்டர் சாலை வசதி உள்ளது. இதில் தேசிய நெடுஞ்சாலை 4,873 கிலோ மீட்டர் தூரம், மாநில நெடுஞ்சாலை 10,549 கிலோ மீட்டர் தூரமும், மாவட்ட முதன்மை சாலை 11,315 கிலோ மீட்டர் தூரமும், மாவட்ட இதர சாலைகள் மற்றும் கரும்பு அபிவிருத்தி திட்ட சாலைகள் 34,937 கிலோ மீட்டர் தூரமும், உள்ளாட்சிச் சாலைகள் (கிராமச் சாலைகள்) மற்றும் இதர சாலைகள் 90,509 கிலோ மீட்டர் தூரமும் உள்ளன.

வகைப்பாடு                 ஒரு வழி         இடை வழி          இரட்டை வழி    பல வழி        மொத்தம்
தேசிய நெடுஞ்..           310                                21                       3431                      103                 4873
மாநில நெடுஞ்..          2178                             878                       3946                       134               10549
மா.வ முதன்மை        4946                             725                       1708                          29               11315
மா.வ இதர சாலை    40654                          846                           681                         38                34937
உள்ளாட்சி                  –                                  –                                –                              –                   90509
மொத்தம்                      48088                         2470                          9766                     304                   152183

பசுமைச் சாலை திட்டம் :
மத்திய அரசு சேலம் – சென்னை (தாம்பரம்) இடையே 8 வழி பசுமை விரைவு சாலை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதன் திட்ட மதிப்பு ரூ.10 ஆயிரம் கோடியாகும். 277 கிலோ மீட்டர் தூரம். இந்த பசுமை வழிச்சாலை சேலம், தர்மபுரி,; கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் வழியாக சென்னை தாம்பரத்தை சென்றடைகிறது. அதாவது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு, உத்தரமேரூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு, வந்தவாசி, போ@ர், ஆரணி, செங்கம், தர்மபுரி மாவட்டத்தில் தீர்த்தமலை, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, மஞ்சவாடிகணவாய் வழியாக சேலம் மாவட்டத்தில் ஆச்சாங்குட்டபட்டி, ஆயோத்தியாப்பட்டணம், வரகம்பாடி, எருமாபாளையம், நிலவாரப்பட்டி, கெஜ்ஜகல்நாயக்கன்பட்டி வழியாக சேலம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இணைகிறது.

எட்டு வழி பசுமைச் சாலை திட்டத்தை நிறைவேற்ற சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நிலம்; தேவைப்படுகிறது. இதில் 8 ஆயிரம் ஏக்கர் விவசாயிகளின் நஞ்சை, புஞ்சை நிலங்கள், ஆயிரம் ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்கள், ஆயிரம் ஏக்கர் வனத்துறை நிலங்கள் இத்திட்டத்திற்காக அரசு கையகப்படுத்த முடிவு செய்துள்ளது.

பல கிராமங்களே மூழ்கவிருக்கின்றன
பசுமைச் சாலை திட்டத்தை செயல்படுத்த அரசு, விவசாயிகளின் விளை நிலங்களை எடுக்க முயற்சி செய்கிறது. இதனால் லட்சக்கணக்கான விவசாயிகளும் அவருடைய குடும்பங்களும் பாதிக்கப்படுகின்றனர். 10 ஆயிரம் கிணறுகள் மற்றும் லட்சக்கணக்கான தென்னை, பாக்கு, மா மரங்கள் பாதிக்கப்படுகின்றன. 100க்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள் பாதிக்கப்படுகின்றன. பல லட்சம் வாழை மரங்கள் அழிக்கப்படுகின்றன. பல பள்ளிக்கூடங்கள், கோயில்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் இடிக்கப்பட உள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக பல கிராமங்களே இந்த பசுமை சாலையில் மூழ்கிட இருக்கின்றன. இதனால் பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் வீடுகளை இழந்து நடுத்தெருவில் நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. நெல் விளையும் பூமி அழிக்கப்படுகின்றது. இதனால் தமிழகத்தின் நெல் உற்பத்தி பாதிப்படையும்.

வனநிலங்கள் எடுப்பு :
சேலம் மாவட்டத்தில் ஜருகுமலை, அருநூற்றுமலை, சேர்வராயன்மலை, சின்னகல்வராயன் மலை, பெரிய கல்வராயன் மலை, தர்மபுரி மாவட்டத்தில் சித்தேரி மலை, திருவண்ணாமலை மாவட்டத்தில் கவுத்திமலை, வேதிமலை ஆகிய 8 மலைகளில் வன நிலங்களை அரசு எடுத்து சாலை அமைக்க உள்ளது. அதற்கு ஈடாக வேறு நிலம் மாநில அரசு வழங்கி அங்கு மரம் வளர்க்க ஏற்பாடு செய்யப்படும் என்று தமிழக முதல்வர் அவர்கள் அறிவித்துள்ளார். வன நிலங்களில் மரம் வளர்ப்பு மட்டுமா உள்ளது. ஏராளமான கரடி, மான், காட்டெருமை, நரி, காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகள், பறவைகளின் வாழிடம் பறிக்கப்படுகிறது. இதனால் பாதிக்கப்படுகின்றன. எட்டு மலைகளை குடைந்து சுரங்கம் அமைக்கப்பட உள்ளது என்று முதல்வர் தெரிவித்துள்ளர். இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். ஜருகுமலை, அருநூற்றுமலை, சேர்வராயன்மலை, கல்வராயன்மலை, சித்தேரிமலை, கவுத்தி மலை, வேதிமலையில் ஏராளமான மலைவாழ் மக்கள் வாழ்கின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.

கைது -சிறை
எட்டுவழி பசுமைச் சாலை திட்டம் வந்தால் எங்களுக்கு மிகப் பெரிய பாதிப்பு ஏற்படும் என்று அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். சேலம் மாவட்டம் ஆச்சாங்குட்டப்பட்டியில் அரசு அதிகாரிகள் அளவீடு செய்ய வந்தபோது மக்கள் கடுமையான ஆட்சேபணையை தெரிவித்தனர். ஆச்சாங்குட்டப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட செங்காட்டூர், அடிமலைபுதூர், கத்தரிப்பட்டி, ஆதிதிராவிடர் காலன மக்கள் ஒன்று கூடி திரௌபதி அம்மன் கோவிலில் கூட்டம் நடத்தி பசுமைச் சாலை திட்டத்திற்கு எதிராக தீர்மானம் போட்டுள்ளனர். பசுமைச் சாலைக்கு எதிராக தீர்மானம் போட்டது தவறு என்று வீராணம் காவல்துறையினர் நள்ளிரவில் 6 பேரை கைது செய்துள்ளனர்.

இந்த கிராமத்தில் மட்டும் 200 ஏக்கர் நிலம் எடுக்க அரசு முடிவு செய்துள்ளது. இதனால் 10 ஆயிரம் தென்னை மரம் மற்றும் மா, பாக்கு மரங்கள், வாழை, நெல், தோட்டப் பயிர்கள் பாதிக்கப்படுகின்றன. 100க்கும்; அதிகமான வீடுகள் இடிக்கப்பட உள்ளன. காவல்துறையின் கைது நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்திய பின் 5 பேரை விடுவித்து முத்துக்குமார் என்பவரை மட்டும் சேலம் சிறையில் அடைத்துள்ளனர். இதேபோல சீவலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள மாரிமுத்து என்பவரை அன்னதானம்பட்டி காவல்துறையினர் கைது செய்து சேலம் சிறையில் அடைத்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில் அரூர், பாப்பிரெட்டிபட்டி சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்கள் சுமார் 500 பேர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கச் சென்ற போது காவல்துறையினர் வழிமறித்து தடுத்துள்ளனர். ஆட்சேபணை மனு கொடுக்க தமிழக அரசு தெரிவித்துள்ள விபரத்தை விவசாயிகள் காவல்துறையினருக்கு எடுத்து சொன்ன பின்பு பேரணியாக செல்ல அனுமதி அளித்துள்ளனர். ஐந்து மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் சங்க கூட்டம் திருவண்ணாமலையில் 20.06.2018 அன்று ஒரு திருமண மண்டபத்தில் நடக்க இருந்தது. காவல்துறையினர் திருமண மண்டப உரிமையாளரை கூட்டம் நடத்த அனுமதிக்கக் கூடாது என்று மிரட்டியுள்ளனர். இதனால் மண்டபத்தில் கூட்டம் நடைபெறாமல் சங்க அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த விவசாயிகள் 27 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். விவசாயிகள் சங்கத் தலைவர்கள் வெங்கடேசன், பலராமன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் அதிகாலையிலேயே கைது செய்துள்ளனர்.

பசுமைச் சாலை திட்டத்திற்கு எதிராக பேசிய பலரையும் கைது செய்யும் காரியத்தில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. இது கடுமையான கண்டனத்துக்குரியது.

அறிவிக்கப்படாத அவசர நிலையா?
பசுமை வழிசாலையை தமிழக அரசு செயல்படுத்த ஏன் இந்த அவசரம்? சென்னையிலிருந்து சேலத்திற்கு பிரதானமாக நான்கு சாலைகள் உள்ளன.

1. சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, ஆத்தூர், வாழப்பாடி, சேலம்.

2. சென்னை, ஸ்ரீபெரும்புதூர், வேலூர், ஆம்பூர், காவேரிப்பட்டினம், தர்மபுரி, ஓமலூர், சேலம்.

3. சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, அரூர், சேலம்.

4. சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, முசிறி, நாமக்கல், ராசிபுரம், சேலம்.
தற்போது இந்த வழிகளில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இது தவிர ஏராளமான ரயில்கள் இயக்கப்படுகி;ன்றன. விமான சர்வீஸ் உள்ளது. இவ்வாறு இருக்க ஏன் இந்த அறிவிக்கப்படாத அவசர நிலையை தமிழக அரசு கையாளுகிறது.

கனிம வளக் கொள்ளை
சேலம், திருவண்ணாமலையில் உள்ள மலைப் பகுதிகளில் ஏராளமான கனிம வளங்கள் உள்ளன என்று புவியியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். அங்கிருக்கும் கனிம வளங்களை கார்ப்பரேட் கம்பெனிகள் கொள்ளை அடித்துச் செல்லும் போது எவ்வித இடையூறுகளும் ஏற்படாமல் இருக்க இந்த எட்டுவழி பசுமைச் சாலையோ என்கிற ஐயம் ஏற்படுகிறது. ஏனெனில் கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் ராட்சத வாகனங்களாக இருக்கும். அவை திரும்பிச் செல்ல தற்போது உள்ள சாலைகள் இடையூறாக இருக்கும். ஆகவே எந்த வித இடையூறுகளும் இல்லாமல் இருக்க இந்த பசுமைச் சாலை திட்டம். இந்த பசுமைச் சாலையில் எந்த நெடுஞ்சாலைகளும் இடையில் இணைப்பு இல்லை. தாம்பரத்தில் ஆரம்பித்து சேலத்தில் முடிவு என்ற வகையில் தான் உள்ளது.

புதிய சாலையின் நோக்கம் :
புதிய பசுமைச் சாலை திட்டத்தை செயல்படுத்தும் போதும் ஏராளமான கமிஷன் கிடைக்க வாய்ப்புள்ளது. அதேபோல் 8 டோல் கேட்டுகள் அமைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு டோல் வழங்க முடியும். அதன் மூலம் ஏராளமான கமிஷன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது என்று சாதாரணமான மக்கள் கூறுகின்றார்கள்.
எது, எப்படியோ? ஐந்து மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். வீடுகளை இழந்து தெருவில் நிற்க வேண்டிய நிலை வரும் அரசு கொடுக்கின்ற இழப்பீடு அவர்களுடைய மறு வாழ்க்கைக்கு போதுமானதாக இருக்காது. ஏனெனில் குருவி சேர்த்தது போல கொஞ்சம், கொஞ்சமாக சேர்த்து வீடு வாசலை கட்டியுள்ளனர். ரூ.120 கூலி வாங்கக் கூடிய விவசாயத் தொழிலாளி வீட்டை இழக்கின்றபோது மீண்டும் அவரால் வீடு கட்ட முடியுமா? என்கிற கேள்வி எழுகிறது.

எனவே தமிழக அரசு மக்களின் கருத்துக்களை முழுமையாக முறையாக கேட்க வேண்டும். இதில் 2013ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தும் சட்டத்திற்கு உட்பட்டு 80 சதவீத மக்கள் ஒப்புதல் கொடுத்தால் நிலத்தை எடுத்து பயன்படுத்தலாம். அவ்வாறு ஒப்புதல் கொடுக்கவில்லை என்றால் அரசு இத்திட்டத்தை கைவிட வேண்டும். இல்லையேல் விவசாயிகளின் கோபக்கனல் ஐந்து மாவட்டத்தில் மட்டும் அல்லாமல், தமிழக அரசுக்கு எதிராக, தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகளின் கோபக் கனலாக மாறும். அதனால் தமிழக அரசு செயல்படுவதில் பெரும் நெடுக்கடி ஏற்படும் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
-கட்டுரையாளர்
மாநிலப் பொருளாளர்,
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

Leave a Reply

You must be logged in to post a comment.