திருவனந்தபுரம்:
நஷ்டத்தில் இயங்கிவரும் மத்திய பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் நியூஸ் பிரிண்ட் லிமிடெட் என்கிற நிறுவனத்தை நடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக கேரள தொழில்துறை அமைச்சர் ஏ.சி.மொய்தீன் மத்திய தொழில்துறை அமைச்சர் ஆனந்த கீதேக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளாக இந்துஸ்தான் நியூஸ் பிரிண்ட் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. ஆனால், இதுவரை மத்திய அரசிடமிருந்தோ, தாய் நிறுவனமான இந்துஸ்தான் பேப்பர் கார்ப்பரேசனிடமிருந்தோ எந்த ஒரு உதவியும் கிடைக்கவில்லை. மாறாக கேரளம் நஷ்டத்தை ஈடுகட்ட தேவையான மூலப்பொருட்களை குறைந்த விலையில் இந்த நிறுவனத்திற்கு வழங்கியது. பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு புறக்கணிப்பதும், தாராளமயக் கொள்கைகளுமே அவற்றை நஷ்டமடையச் செய்துள்ளன.

கேரள முதல்வர் இது தொடர்பாக பலமுறை மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்துஸ்தான் பிரஸ் நிறுவனத்தை மாநில அரசின் பொறுப்பில் எடுத்துக்கொள்ள சட்டமன்றத்திலும் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இதுவரை எந்தவொரு சாதகமான பதிலும் மத்திய அரசிடமிருந்து இல்லை. இந்த நிறுவனத்தை ஏலத்தில் விற்க இப்போது மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்கான ஆலோசனைகளில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இப்பிரச்சனையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு மாநில அரசுடன் கலந்து ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் அமைச்சர் தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: